×
 

மோடி கூட்டத்தில் ஆப்செண்ட்!! கடைசி நேரத்தில் ட்விஸ்ட் அடித்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமி!

மதுராந்தகம் கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை. எங்கள் நிலைப்பாட்டை ஒருவாரத்தில் அறிவிப்போம். புதிய தமிழகம் கட்சி இல்லாமல் தென் தமிழகத்தில் யாரும் வெற்றி பெற முடியாது என கிருஷ்ணசாமி கூறினார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், கூட்டணி அரசியல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி கலந்துகொள்வதாக வெளியான தகவல்களை மறுத்து, அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடியாக விளக்கம் அளித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது: “மதுராந்தகத்தில் நடைபெறும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி கலந்துகொள்வதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது முற்றிலும் தவறான தகவல். எங்கள் கட்சி இன்னும் எந்த கூட்டணி குறித்தும் இறுதி முடிவு எடுக்கவில்லை. நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடைபெற்று வருகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று கொள்கை ரீதியான ஆட்சி அமைக்கும் நோக்கில் திட்டமிட்டு வருகிறோம். எங்கள் கூட்டணி நிலைப்பாட்டை ஒரு வாரத்திற்குள் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்.

இதையும் படிங்க: 10 சீட்டு கன்ஃபார்ம் பண்ணிக்கலமா? பியூஸ் கோயல், எடப்பாடி பழனிசாமியிடம் வாசன் வலியுறுத்தல்!

கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைவர்கள் கூட்டணிக்கு சில வழிமுறைகளை வைத்திருந்தனர். ஆனால் தற்போது அப்படி இல்லை. இதுவரை எந்த கட்சியும் எங்களை அதிகாரபூர்வமாக அணுகவில்லை. ஆட்சி அதிகாரப் பங்கு என்ற நிலைப்பாட்டுக்குள் நாங்கள் இப்போது வரவில்லை.

தமிழகத்தில் 100 தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சி வலுவாக உள்ளது. எங்களை இல்லாமல் தென் தமிழகத்தில் யாரும் வெற்றி பெற முடியாது. மதுவிலக்கு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு, கனிம வளங்கள் திருட்டு தடுப்பு உள்ளிட்ட எங்கள் கொள்கைகளுடன் உடன்பாடு உள்ள கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம்.

கடந்த காலங்களில் இருந்த நிலைப்பாடுகள் இம்முறை இருக்காது. புதிய தமிழகம் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும். ஒரு சில தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதால், தேர்தல் அறிவிப்புக்கு 5 நாட்கள் முன்புதான் சின்னம் ஒதுக்கப்படும்” என்று தெளிவுபடுத்தினார்.

புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடுவதா அல்லது எந்த கூட்டணியில் இணைவதா என்பது தமிழக அரசியலில் மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் தலித் வாக்குகளை பெரிதும் செல்வாக்கு செலுத்தும் இக்கட்சியின் முடிவு என்டிஏ மற்றும் திமுக இரு அணிகளுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இதற்கிடையே, இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். அதிமுக, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் மேடையேறும் நிலையில், புதிய தமிழகம் கட்சியின் இந்த அறிவிப்பு கூட்டணி அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஷாக்கை குறைங்க ஸ்டாலின்!! எவ்வளவு கதறினாலும் இனி நடக்காது!! நயினார் விளாசல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share