“100 நாள் வேலை திட்டம் பறிப்பு என்பது பச்சைப் பொய்!” திமுகவிற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கடும் கண்டனம்!
100 நாள் வேலைத் திட்டம் பறிக்கப்பட்டதாக திமுக பொய் பிரச்சாரம் செய்வதாகவும், மத்திய அரசு வேலை நாட்களை 125-ஆக உயர்த்தியுள்ளது என எல். முருகன் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (100 நாள் வேலைத் திட்டம்) மத்திய அரசு பறித்துவிட்டதாக தி.மு.க மேற்கொண்டு வரும் பிரச்சாரம் முற்றிலும் பொய்யானது என்றும், உண்மையில் வேலை நாட்கள் 125-ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வி.பி. கிராம்’ (VB GRAM) சட்டம் குறித்து விரிவாகப் பேசினார். கிராமப்புற மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் இந்தச் சட்டம் குறித்து தி.மு.க எம்.பி-க்கள் அவையில் பேசிய நிலையில், தற்போது வெளியே வந்து மக்களை ஏமாற்றும் வகையில் போலிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகச் சாடினார். டிஜிட்டல் முறையில் வெளிப்படைத்தன்மையுடன் ஊதியம் வழங்குவதை உறுதி செய்யும் இந்தச் சட்டத்தின் மூலம் முறைகேடுகள் தடுக்கப்படும் என்றும், தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியான 150 நாட்கள் வேலையை வழங்காமல் மக்களை ஏமாற்றி வருவதாகவும் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசின் புதிய சட்டங்கள் மற்றும் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்துப் பல அதிரடி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். “நாடாளுமன்றத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக விவாதிக்கப்பட்டுப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட ‘வி.பி. கிராம்’ சட்டம், கிராமப்புறங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் செல்வதையும், நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதையும் உறுதி செய்கிறது” என்றார். 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் முறைகேடுகளைத் தவிர்க்கவே கிராம சபைகள் மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்; இதைத் தமிழக அரசு எதிர்க்கக் காரணம், இங்குப் பல மாவட்டங்களில் இத்திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதுதான் என அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: “காந்தி பெயரை அழிக்கப் பார்க்காதீங்க!” – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடி எச்சரிக்கை!
“முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே! 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் எனத் தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்களே, அதைச் செய்தீர்களா?” எனக் கேள்வி எழுப்பிய அவர், மத்திய அரசு ஏற்கனவே 125 நாட்களாக உயர்த்தியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உதவ வேண்டும் என முதலமைச்சர் கூறியதற்குப் பதிலளித்த எல். முருகன், “சட்டம்-ஒழுங்கு என்பது மாநில அரசின் பொறுப்பு. கஞ்சாவைத் தடுக்க முடியவில்லை என்று முதலமைச்சர் கூறுவது, தனது நிர்வாகத் தோல்வியை அவரே ஒப்புக்கொள்வது போலாகும்” என விமர்சித்தார்.
முன்னதாகச் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், பிரதமர் மோடி அவர்கள் தமிழ்ப் பண்பாட்டிற்கு உலக அளவில் உயரிய இடத்தைத் தேடித்தந்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது முதல், ஐநா சபையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என முழங்கியது வரை தமிழர்களுக்குப் பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளதாகப் பட்டியலிட்டார். அதன் ஒரு பகுதியாகவே, நேர்மையான தலைவரான சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களைத் துணை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்துள்ளார் என்றார். சொந்தச் சொத்தையே விற்று கட்சிப் பணியாற்றிய சி.பி. ராதாகிருஷ்ணனின் நேர்மை இன்றைய அரசியலுக்குப் பாடம் என அவர் புகழாரம் சூட்டினார்.
இதையும் படிங்க: "காந்தியடிகள் மீதான வன்மம்!" - 100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!