×
 

சிவகங்கை இரட்டை கொலை, மதுரை மாணவர் மரணம்! நீதி கேட்டு போராடியவர்கள் கைதுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

சிவகங்கை இரட்டைக் கொலை மற்றும் மதுரையில் மாணவர் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்கள் கைது செய்யப்பட்டதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் அரங்கேறிய படுபயங்கர இரட்டைக் கொலை மற்றும் மதுரையில் கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வனின் மர்ம மரணத்திற்கு நியாயம் கேட்டு ஜனநாயக வழியில் அமைதிப் போராட்டம் நடத்திய பொதுமக்களையும் மாணவர் அமைப்பினரையும் தமிழ்நாடு காவல்துறை அடக்குமுறையைக் கையாண்டு வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ள கொடூரச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது என்றும், ஆளும் தவெக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து சந்தி சிரிப்பதாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகக் காட்டமாக எச்சரித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பழமலைநகர்–கொடிக்காடு கண்மாய் பகுதியில் அடையாளம் தெரியாத மர்மக் கும்பலால் இரு அப்பாவி இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொடூரச் சம்பவத்தில் உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உடல்களை வாங்க மறுத்துப் போராடிய உறவினர்களையும் பொதுமக்களையும் காவல்துறையினர் நள்ளிரவில் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். 

அதேபோல், மதுரை மாவட்டத்தில் கடந்த 7-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த மாணவர் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு உரிய நீதி கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினரையும் போலீஸ் படை குண்டுகட்டாகத் தூக்கிக் கைது செய்தது.

இதையும் படிங்க: அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த இரு தொடர் அடக்குமுறை நடவடிக்கைகள் குறித்துத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் காட்டமான கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள டிடிவி தினகரன், குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டிய காவல்துறையோ, தனது முழு அதிகார பலத்தையும் நீதி கேட்டு மன்றாடும் சாமானிய மக்கள் மீது ஏவி அவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பது எந்த வகையான மக்களாட்சி தர்மம்?

ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் நடுங்க வைக்கும் அளவிற்கு நடைபெற்றுள்ள இந்தப் படுகொலைச் சம்பவங்களில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளைக் கூண்டோடு கைது செய்வதை விடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஒடுக்குவது வெட்கக்கேடானது என்று கொதித்தெழுந்துள்ளார்.

மேலும், முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி நிர்வாகத்தைக் கிழித்துத் தொங்கவிட்ட அவர், தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தது முதலே மாநிலத்தின் எந்தவொரு மூலையிலும் கொலைகள், கொள்ளைகள் அரங்கேறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்குச் சட்டம்-ஒழுங்கு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தலைநகர் சென்னை தொடங்கி தென் மாவட்டங்கள் வரை நாள்தோறும் அரங்கேறி வரும் தொடர் படுகொலைகள் சாமானிய மக்களின் உயிர்ப் பாதுகாப்பைப் பகடைக்காயாக மாற்றியுள்ளன. 

காவல்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரோ, கொடிய குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதற்குப் பதிலாக, குற்றங்களுக்கான காரணங்களை மேடைகளில் விவரிப்பதும், தினசரி நடக்கும் ரத்தக் களறிக்கும் ஆட்சிக்கும் சம்பந்தமே இல்லை என்பது போலப் பொறுப்பற்ற முறையில் பேசி நழுவுவதுமே குற்றவாளிகளுக்குக் கொஞ்சமும் பயமில்லாத ஓர் அசாதாரண அராஜகச் சூழலை உருவாக்கியுள்ளது என்று சாடினார்.

இறுதியாக அரசுக்குக் கெடு விதித்த டிடிவி தினகரன், காவல்துறையின் ஒருதலைப்பட்சமான போக்கைக் கைவிட்டு, சிவகங்கை இரட்டைக் கொலைச் சம்பவம் மற்றும் மதுரையில் மாணவர் தமிழ்ச்செல்வன் மர்ம மரணம் தொடர்பான இரு வழக்குகளையும் உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். 

உயர்மட்ட தீவிர விசாரணை நடத்தி, இந்தக் கொடூரக் குற்றங்களில் தொடர்புடைய அனைவரையும் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தி மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். இனியாவது தூங்கி வழியும் தவெக அரசும் காவல்துறையும் விழித்துக் கொண்டு தொடர் கொலைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தப் போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் முடிவை கைவிடுக டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share