×
 

பிரதமரையே தாக்க முயற்சி!! என்ன தண்டனை?! எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீது நடவடிக்கை கோரி பாஜ பெண் எம்.பிக்கள் கடிதம்!

நமது ஜனநாயகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்திய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது, உரிய விதிகளின் கீழ், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் பாஜ எம்பிக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டாவது வாரமாக எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக முடங்கியுள்ளது. ராகுல் காந்தியை பேச அனுமதிக்காதது, 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம், இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் சபையை சீர்குலைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி சபாநாயகர் ஓம் பிர்லா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டார். பிரதமர் மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பதிலுரை ஆற்ற இருந்தபோது, காங்கிரஸ் எம்பிக்கள் சிலர் பிரதமரின் இருக்கைக்கு அருகில் சென்று தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தகவல் கிடைத்ததாகக் கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பெண் எம்பிக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். ஜோதிமணி, சுதா உள்ளிட்ட காங்கிரஸ் பெண் எம்பிக்கள் சபாநாயகருக்கு கடிதம் எழுதினர். "ஆளுங்கட்சியின் கட்டாயத்தால் எதிர்க்கட்சி பெண் எம்பிக்கள் மீது அபாண்டக் குற்றச்சாட்டு சுமத்துவது துரதிர்ஷ்டவசமானது. எங்களுக்கு வன்முறை மீது நம்பிக்கை இல்லை. பிரதமர் வராததற்கு அச்சுறுத்தல் காரணம் இல்லை. எதிர்க்கட்சிகள் மீதுள்ள பயமே காரணம். சபாநாயகர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்" என அந்த கடிதத்தில் வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மக்களவையில் தொடரும் கூச்சல், குழப்பம்! எதிர்க்கட்சிகள் தொடர் அமளி! முடங்கும் நடவடிக்கைகள்!

இதற்கு பதிலடியாக இன்று பாஜக பெண் எம்பிக்கள் 11 பேர் கையெழுத்திட்டு சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

"எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரின் மேஜையில் ஏறி காகிதங்களை கிழித்து வீசினர். சில பெண் உறுப்பினர்கள் ஆக்ரோஷமாக பதாகைகளுடன் பிரதமரின் இருக்கையை சுற்றி வளைத்தனர். மூத்த அமைச்சர்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் நுழைந்தனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் சபை நடவடிக்கைகளை சீர்குலைத்தனர். நமது ஜனநாயகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள் மீது உரிய விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.

மக்களவையின் புனிதத்தையும் கண்ணியத்தையும் பாதுகாத்த சபாநாயகருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

இந்த கடிதப் போர் லோக்சபாவில் ஆளும் – எதிர்க்கட்சி மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. சபை எப்போது சீராக செயல்படும் என்பது இப்போது பெரிய கேள்வியாக உள்ளது.

இதையும் படிங்க: இது ரவுடித்தனம் பண்ணுற இடமில்லை!! ராகுல் பிடிவாதம்தான் காரணம்! கிரண் ரிஜிஜூ கொந்தளிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share