சென்னையின் புதிய அடையாளமான மத்திய கைலாஷ் மேம்பாலம்: தமிழர்களின் கலை பொக்கிஷங்கள்!
சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ₹60.68 கோடி மதிப்பிலான புதிய 'எல்' வடிவ மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சென்னை ஐடி காரிடார் (OMR) பகுதியின் நுழைவாயிலான மத்திய கைலாஷ் சந்திப்பில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள புதிய 'எல்' வடிவ மேம்பாலத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சுமார் ₹60.68 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம், வெறும் சிமெண்ட் கட்டுமானமாக மட்டும் இல்லாமல், தமிழர்களின் பாரம்பரியக் கலைகளைப் பறைசாற்றும் ஒரு கலைக்கூடமாகத் திகழ்கிறது.
இந்த மேம்பாலத்தின் தனிச்சிறப்பே அதன் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் தான். இயல், இசை, நாடகம் மற்றும் தமிழர்களின் வீரக்கலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் மொத்தம் 20 சிலைகள் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. இதில் யாழ், வீணை, நாதஸ்வரம் போன்ற இசைக்கருவிகளும், கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற நாட்டுப்புறக் கலைகளும், சிலம்பாட்டம் மற்றும் களரி போன்ற வீரக்கலைகளும் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், மண்பாண்டக் கலை போன்ற வாழ்வியலோடு இணைந்த கலைகளும் இங்கு இடம்பெற்றுள்ளன.
இந்தச் சிலைகள் சாதாரண செங்கற்களால் உருவாக்கப்படவில்லை. சாதாரண செங்கல்லை விட நான்கு மடங்கு அதிக விலையுடைய, மிக வலிமையான 'வயர் கட் பிரிக்' (Wire Cut Bricks) கொண்டு இவை செதுக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஆர்க்கிடெக்ட் ஆலோசகர் சைன் பி தாஸ் கூறுகையில், "மத்திய கைலாஷ் சந்திப்பு ஒரு சர்வதேச அடையாளமாக மாற வேண்டும் என்ற நோக்கில், நெடுஞ்சாலைத் துறை அமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இந்த 20 சிலைகளும் தேர்வு செய்யப்பட்டன" என்றார்.
இதையும் படிங்க: மத்திய கைலாஷ் டிராஃபிக்கிற்கு எண்டு கார்டு! ₹60 கோடி ‘எல்’ வடிவ மேம்பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்!
சர்தார் பட்டேல் சாலையிலிருந்து ஓஎம்ஆர் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இந்தப் பாலம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், பாலத்தின் கீழ் உள்ள இந்தச் சிலைகள் சென்னையின் அழகைக் கூடுதல் மெருகேற்றியுள்ளன. நவீன உள்கட்டமைப்பும், தொன்மையான கலைகளும் கைகோர்த்துள்ள இந்தத் திட்டம், சென்னை மாநகரின் உள்கட்டமைப்பு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னை வானில் வட்டமடித்த விமானம்! – 2 மணி நேர பரபரப்புக்கு விமான நிலைய அதிகாரிகள் விளக்கம்!