×
 

சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! ஜனாதிபதி முர்மு உத்தரவு; முதல்வர் விஜய் வாழ்த்து!

புதிதாக நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்களில் கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி, ரஜ்னிஷ் பதி, ரமேஷ் நடராஜன், ஜி.கே. முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை ஐகோர்ட்டில் காலியாக இருந்த நீதிபதி பணியிடங்களில் 15 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை ஐகோர்ட்டில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் தற்போது 51 நீதிபதிகள் பணியாற்றி வரும் நிலையில், 24 பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் நோக்கில் மாவட்ட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் என 19 பேரின் பெயர்களை சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரையை உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியமும் பரிசீலித்து ஏற்றுக்கொண்டது. பின்னர் அந்த பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. மத்திய அரசு இதனை ஆய்வு செய்து, 15 பேரை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது.

இதையும் படிங்க: பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்னாச்சு? தவெக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் மு.வீரபாண்டியன்!

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி நேற்று அதிகாரப்பூர்வ நியமன உத்தரவை பிறப்பித்தார். இதன் மூலம் சென்னை ஐகோர்ட்டில் புதிய நீதிபதிகள் விரைவில் பதவியேற்கும் நிலை உருவாகியுள்ளது. காலியாக இருந்த பணியிடங்களில் ஒரு பகுதி நிரப்பப்படுவதால், வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படவும், நீதிமன்றத்தின் பணிச்சுமை குறையவும் வாய்ப்பு உள்ளது.

புதிதாக நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்களில் கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி, ரஜ்னிஷ் பதி, ரமேஷ் நடராஜன், ஜி.கே. முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கூடுதல் நீதிபதிகளாக ரவீக்குமார் சங்கரநாராயணன், திலீப் குமார் நாகராஜன், எல்லப்பன் மனோகரன், பி. முருகன், எம்.டி. சுமதி, எஸ். அல்லி, சி. திருமகள், சண்முகம் கார்த்திகேயன், முருகேசன் பாலுச்சாமி மற்றும் என். குணசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய நீதிபதிகளுக்கு தமிழக முதல்வர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்தியில், நீதியின் மாண்பையும் அரசியலமைப்பின் விழுமியங்களையும் நிலைநாட்டி, மக்கள் அனைவருக்கும் சமநீதியும் சமூகநீதியும் கிடைக்கும் வகையில் புதிய நீதிபதிகளின் பணி சிறக்க வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.

சென்னை ஐகோர்ட்டில் நீண்ட காலமாக நிலவி வந்த காலிப்பணியிடங்கள் காரணமாக வழக்குகள் தேக்கம் மற்றும் நீதிபதிகளின் பணிச்சுமை அதிகரித்திருந்தது. இந்நிலையில் 15 புதிய நீதிபதிகளின் நியமனம் நீதித்துறை நிர்வாகத்தில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ‘வளமான தமிழகத்தை நோக்கி நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்’! பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர்களை பாராட்டிய முதல்வர் விஜய்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share