சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்துக்கு எதிரான ஆட்கொணர்வு மனு!! நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நாளைக்கு (மே 21) ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
சென்னை: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது தமிழக அரசு பிறப்பித்த குண்டர் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை (மே 21) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் தமிழக அரசின் நிர்வாகம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளை தனது யூடியூப் சேனல்களில் தொடர்ந்து வெளிப்படையாகப் பேசி வந்தார். இதனால் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், நிபந்தனையுடன் ஜாமினில் வெளியே வந்திருந்தார். ஜாமின் தேதி முடிந்த பிறகு போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகாமல் தலைமறைவானார். பின்னர் ஆந்திராவில் இருந்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து அவரது சகோதரி மகன் பரத் சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். சுப்ரீம் கோர்ட் அந்த மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியது. அதன்படி பரத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: ஒத்த ஓட்டில் வென்ற தவெக எம்.எல்.ஏ பதவியேற்பில் சிக்கல்?! பெரிய கருப்பன் தொடுத்த வழக்கு!
இன்று (மே 20) நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் அடங்கிய விடுமுறைக்கால அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. புதிய அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராக வேண்டியிருப்பதால், வழக்கை ஒரு நாள் ஒத்திவைக்குமாறு கூடுதல் அரசு வழக்கறிஞர் முனியப்பராஜ் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். நீதிமன்றம் அந்த கோரிக்கையை ஏற்று விசாரணையை நாளைக்கு (மே 21) ஒத்திவைத்தது.
சவுக்கு சங்கர் விவகாரம் தமிழக அரசியல் மற்றும் ஊடக வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அவரது கைது மற்றும் குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து பல தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நாளை நடைபெறும் விசாரணையில் என்ன முடிவு எடுக்கப்படும் என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க: குழந்தைகளை தனிமைப்படுத்தி வளர்க்காதீங்க!! பிரிச்சு வைக்க அவங்க ஏவுகணை இல்ல! ஐகோர்ட் கருத்து!