யுடியூபர் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின்!! சென்னை ஐகோர்ட் உத்தரவு!
பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட யுடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.
சென்னை: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் (சங்கரநாராயணன்) பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 13ஆம் தேதி சென்னை நந்தனம் பகுதியில் உள்ள பார் உரிமையாளர் ஹரிச்சந்திரனை பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறி சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சவுக்கு சங்கரின் தாயார் கமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் வி. சிவஞானம் அமர்வு, அவரது உடல்நிலை மற்றும் தனிநபர் சுதந்திரத்தை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமின் வழங்கியது. டிசம்பர் 26, 2025 முதல் 2026 மார்ச் 25ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 25ஆம் தேதிக்குள் அவர் போலீசாரிடம் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி! அறிக்கை தாக்கல் பண்ணுங்க! மதுரை ஐகோர்ட் ஆர்டர்!
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: “கருத்து வேறுபாடு ஜனநாயக உரிமை. சட்டப்பேரவையில் கூட கருத்து வேறுபாடு மதிக்கப்படுகிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விரும்பினால் அவதூறு வழக்கு தொடர்ந்து சிவில் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறலாம். தனிநபர் சுதந்திரத்தை தொடுவது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது” என்றனர்.
மேலும், “சில நபர்களை குறிவைத்து சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடாது. தொடர்ச்சியான கடும் நடவடிக்கைகள் நாட்டு மக்களுக்கு சரியான செய்தியை அனுப்பாது. அதிகார துஷ்பிரயோகம் சவுக்கு சங்கருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்தினருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது” என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
நாட்டை விட்டு வெளியேறக்கூடாது, சாட்சிகளுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. சிறையில் கார்டியாலஜிஸ்ட் மற்றும் நீரிழிவு சிறப்பு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுக்கு சங்கரின் கைது மற்றும் ஜாமின் உத்தரவு தமிழக அரசியல் மற்றும் சமூக வலைதள வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினுக்கு கூச்சமாவே இல்லையா? தேர்தல் அறிக்கை குழு!! பொளந்து கட்டும் அண்ணாமலை!