சீமைக்கருவேலம் அகற்றும் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம்!
சீமைக்கருவேல மரங்களை அகற்றும் வைகோவின் வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து, மாவட்ட ஆட்சியர்களுக்கு ₹5 கோடி நிதி ஒதுக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நிலத்தடி நீரை உறிஞ்சிப் பேராபத்தை விளைவிக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில், தமிழக அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் மற்றும் தனியார் நிலங்களில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக வேரோடு அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பல ஆண்டுகளாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர் சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார். இவ்வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று மீண்டும் விரிவான விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், "சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாகத் தொடர்ந்து கள ஆய்வு நடத்தப்படும் எனக் கூறுவது, பணிகளை முன்னெடுக்காமல் காலதாமதம் செய்வதற்காக அதிகாரிகள் கையாளும் ஒரு தந்திரம்" என்று வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வைகோ ராஜினாமா செய்ய நிர்பந்தித்தார்! கொதித்தெழுந்த மதிமுக எம்.எல்.ஏ-க்கள் இராசேந்திரன், செந்தில்செல்வன்!
மேலும், பணிகளை விரைவுபடுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தங்களது மாவட்டக் கனிம அறக்கட்டளை நிதியிலிருந்து (District Mineral Foundation Fund) தலா ₹5 கோடியை உடனடியாக விடுவித்து பணிகளை முடுக்கிவிட வேண்டும் என நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அதிகாரிகள் முழுமையாக அமல்படுத்தத் தவறினால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது தயவுதாட்சண்யமின்றி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும் என எச்சரித்த நீதிபதிகள், வைகோ தொடர்ந்த இந்த முக்கிய வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: டெல்லியில் வைகோ நூல் வெளியீட்டு விழா! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார்!