×
 
☰

ரேஷன் கடைகளில் பாமாயில் விநியோகத்துக்கு தடை! தீபாவளிக்கு முன் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

முதற்கட்டமாக 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை அக்டோபர் 29-ம் தேதிக்குள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளுக்கு வழங்க வேண்டும் என செப்டம்பர் 29-ம் தேதி உத்தரவிடப்பட்டது.

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்ட 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளின் விநியோகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால், பண்டிகைக் காலத்தில் ரேஷன் கடைகளில் பாமாயில் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை மானிய விலையில் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பாமாயில் பாக்கெட்டுகளும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த விநியோகத்தை மேற்கொள்ள தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்தது.

இதற்காக 6 கோடி பாமாயில் பாக்கெட்டுகளைக் கொள்முதல் செய்ய கடந்த ஜூன் 5-ம் தேதி ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன. செப்டம்பர் 8-ம் தேதி ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டு, பாமாயில் விநியோகப் பணிகள் நான்கு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டன.

இதையும் படிங்க: தமிழக அரசியலில் முக்கிய மாற்றம்..! முழுநேர ஆளுநராகப் பொறுப்பேற்ற அர்லேகர்..!

முதற்கட்டமாக 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை அக்டோபர் 29-ம் தேதிக்குள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளுக்கு வழங்க வேண்டும் என செப்டம்பர் 29-ம் தேதி உத்தரவிடப்பட்டது.

ஆனால், பாமாயில் பாக்கெட்டுகளை நிறுவனங்களுக்கு ஒதுக்கியதில் உரிய விகிதாசார முறை பின்பற்றப்படவில்லை எனக் கூறி, ஒப்பந்தம் பெற்ற கேடிவி ஹெல்த் ஃபுட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 3.6 கோடி பாக்கெட்டுகளை விநியோகிக்க ஒப்பந்தம் பெற்ற தங்களுக்கு 34 லட்சம் பாக்கெட்டுகளை மட்டுமே வழங்க அறிவுறுத்தப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, செப்டம்பர் 29-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட விநியோக உத்தரவுக்கு நவம்பர் 2-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்தார். மேலும், தமிழக அரசு இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க வேண்டிய வழக்கின் விசாரணையையும் அதே தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த உத்தரவு காரணமாக, தீபாவளிக்கு முன்பாக ரேஷன் கடைகளில் பாமாயில் விநியோகம் எவ்வாறு நடைபெறும் என்பது கவனத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், இது பாமாயில் விநியோக உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையே தவிர, தமிழகத்தில் பாமாயில் விநியோகம் நிரந்தரமாக நிறுத்தப்பட்டதாகப் பொருளல்ல. அடுத்தகட்ட நீதிமன்ற விசாரணைக்குப் பிறகே இந்த விவகாரத்தில் தெளிவு கிடைக்கும்.

இதையும் படிங்க: தமிழகத்தில் போதைப்பொருள் வேட்டை தீவிரம்! 9 மாதங்களில் 17,412 பேர் கைது! 808 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share