×
 

மதுரையில் 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சூளுரை!

மதுரையில் 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரையில் திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளருமாகவும் அறியப்பட்ட எஸ்.ஆர். கோபி இன்று அதிமுகவில் இணைந்தார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், தனது ஆதரவாளர்களுடன் அவர் இன்று முறைப்படி அதிமுகவில் இணைந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.ஆர். கோபி தனது கட்சித் தாவல் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசியதாவது, கடந்த 25 ஆண்டுகளாகத் திமுகவிற்காக உழைத்தோம். ஆனால் இன்று திமுக கட்சி முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை. அது சபரீசன் மற்றும் அவரது தரப்பினரின் கைகளில்தான் சிக்கியுள்ளது. அவர்களின் ஆய்வுகளும், குறுக்கீடுகளுமே கட்சியை வழிநடத்துகின்றன" என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

எல்லோரையும் போல் நானும் கட்சியில் பதவியைத் தான் எதிர்பார்த்தேன். ஆனால், திமுகவில் உண்மை உழைப்புக்கும் விசுவாசத்திற்கும் மதிப்பில்லை; தகுதி இல்லாதவர்களுக்குப் பதவிகள் வழங்கப்படுகின்றன எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: மதுரையின் புதிய அடையாளம்: மேம்பாலத்திற்கு ‘நேதாஜி’ பெயர்.. முதல்வர் அறிவிப்பு!

மதுரை மாநகராட்சியில் மேயர் மற்றும் மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியாத பலவீனமான நிலையில் திமுக தலைமை உள்ளதாகவும் அவர் விமர்சித்தார். மு.க. அழகிரி நட்புக்கு இலக்கணமானவர், அவர் மீது என்றும் அன்பு உண்டு. ஆனால், அரசியலில் தனது பாதை மாறியுள்ளதாகவும், இது தனது தனிப்பட்ட முடிவு என்றும் அவர் விளக்கமளித்தார்.

இந்த நிகழ்வின் போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "எஸ்.ஆர். கோபி ஒரு சிங்கம் போன்றவர். தேர்தல் காலங்களில் எங்களையே மூர்க்கமாக எதிர்த்துப் பணியாற்றியவர். மதுரையில் திமுகவிற்காக அரும்பாடுபட்ட இவரைப் போன்றவர்கள் இன்று அங்கே மதிக்கப்படுவதில்லை" என்றார். மேலும், மதுரை எப்போதும் அதிமுகவின் கோட்டைதான் என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று, எடப்பாடியார் மீண்டும் முதல்வராவது உறுதி என்றும் அவர் முழக்கமிட்டார்.

தேமுதிக - திமுக கூட்டணி குறித்துக் கேட்ட கேள்விக்கு, "தேர்தல் அறிவித்த பிறகுதான் கூட்டணி முழுமை அடையும்; தேர்தல் நடைபெறும் பத்து நாட்களுக்கு முன்பாகவே இறுதி நிலவரம் தெரியும்" எனச் செல்லூர் ராஜு மர்மம் விலக்காமல் பதிலளித்தார்.

இதையும் படிங்க: "பிப். 22-ல் அடிக்கல்.. பிரதமர் மோடி திறப்பார்" புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share