×
 

மேயர் பதவி யாருக்கு! அமைச்சர்கள் ஈகோ மோதல்!! உச்சகட்ட குழப்பத்தில் மதுரை மாநகராட்சி!

மதுரை மாநகராட்சி மேயர் பதவியில் யாருடைய ஆதரவாளர்களை தேர்வு செய்வது என அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜனுக்கு இடையே நடக்கும் மறைமுக ஈகோ யுத்தத்தால் இரண்டு மாதங்களாக மாமன்றக் கூட்டம் நடக்கவில்லை. இதனால் நிர்வாகம் முடங்குவதாக சர்ச்சை வெடித்துள்ளது.

சொத்துவரி முறைகேடு புகாரால் முன்னாள் மேயர் இந்திராணி ராஜினாமா செய்து, அவரது கணவர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட பிறகு, மதுரை மாநகராட்சி கடந்த இரண்டு மாதங்களாக மேயர் இல்லாமல் செயல்படுகிறது. மேயர் மட்டுமின்றி 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக் குழுத் தலைவர்களும் பதவி விலகியதால், 100 வார்டுகளையும் கொண்ட தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாநகராட்சி முற்றிலும் முடங்கியுள்ளது. மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் குடிநீர், சாக்கடை, சாலைப் பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

புதிய மேயரைத் தேர்வு செய்வதில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கும், அமைச்சர் மூர்த்தி இடையே கடும் மோதல் நீடிப்பதால், முதல்வர் மு.க. ஸ்டாலினால் இதுவரை இறுதி முடிவு எடுக்க முடியவில்லை. இரு அமைச்சர்களும் தங்களுக்கு நெருக்கமான நபர்களையே மேயராக்க விரும்புவதால், கட்சித் தலைமை குழப்பத்தில் உள்ளது. இதனால், பெண் கவுன்சிலர்களிடம் “மேயர் பதவி உத்தரவாதம்” என்று கூறி பல லட்சம் ரூபாய் “அட்வான்ஸ்” வசூலிக்கும் மோசடியும் நடப்பதாக கட்சிக்கே தகவல் சென்றுள்ளது.

மேலும், தி.மு.க. கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் தான் மாமன்றக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க முடியும் என்ற நிலையில், “மார்க்சிஸ்டை டம்மியாக மட்டும் வைத்திருக்க வேண்டும்” என்று கூறி, தி.மு.க. நிர்வாகிகள் இரண்டு மாதங்களாக மாமன்றக் கூட்டமே நடத்த அனுமதிப்பதில்லை. இதனால் அனைத்துத் திட்டங்களுக்கும் மாமன்ற ஒப்புதல் கிடைக்காமல் முடங்கியுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி நரகாசுரனா? வன்மம், வன்முறையை வெளிப்படுத்தும் திமுக.. நயினார் ஆவேசம்!

இதுகுறித்து மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் (அ.தி.மு.க.) வி.வி. சோலைராஜா கூறியதாவது: “சொத்துவரி முறைகேட்டை வெளிக்கொண்டு வந்தது அ.தி.மு.க. தான். ஆளுங்கட்சிக்குள் எத்தனை கோஷ்டி பூசல் இருந்தாலும், மக்கள் நலன் கருதி மாமன்றக் கூட்டம் நடத்த முடியாத நிலை எந்த மாநகராட்சியிலும் இல்லை. 

ஆனால் மதுரையில் தி.மு.க. வேண்டுமென்றே மார்க்சிஸ்ட் கட்சியை அவமதித்து, மாமன்றக் கூட்டமே நடத்தவிடாமல் தடுக்கிறது. முதல்வரே விரும்பினாலும் இப்போது மேயர் நியமனம் எளிதான காரியமல்ல. அமைச்சர்களின் ஈகோ மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து, விரைவில் புதிய மேயரை நியமிக்க வேண்டும்” என்றார்.

மழைக்காலத்தில் வடிகால் பிரச்னை, குடிநீர் தட்டுப்பாடு, சாலை பழுது போன்ற புகார்கள் அதிகரித்துள்ள நிலையில், மேயர் இல்லாததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்வு நெருங்குவதால், மதுரை மாநகராட்சி பிரச்னை தி.மு.க.வுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. உளவுத்துறை மற்றும் அதிகாரிகளும் “விரைவில் மேயரை நியமிக்காவிட்டால் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஏற்படும்” என்று அறிக்கை அளித்துள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: ராமதாஸ் - அன்புமணி போட்டி போராட்டம்!! கலக்கத்தில் வன்னியர் சங்க நிர்வாகிகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share