×
 

திமுகவா? தவெகவா? மதுரையில் யார் கொடி பறக்கும்? நிர்வாகிகளுக்கு தூண்டில் போடும் வேலை ஜரூர்!

அடுத்தாண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. மதுரையில் நிர்வாகிகளை வளைக்கும் வேளையில் திமுக, தவெக இடையே போட்டி நிலவுகிறது.

மதுரை: வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மதுரை மாவட்டத்தில் ஆளும் திமுகவுக்கும், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் (தவெக) இடையே கட்சி நிர்வாகிகளையும் இளைஞர்களையும் வளைப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

மதுரை வடக்கு மாவட்ட தவெக செயலர் கல்லாணைக்கு எதிராக அக்கட்சியின் உட்பகுதி நிர்வாகிகள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாலாட்சிபுரம் காலாங்கரை பகுதி தவெக நிர்வாகி சத்யா, தனக்கு பதவி வழங்க கல்லாணை மறுப்பதாக குற்றம் சாட்டி, ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதை கட்சித் தலைமையின் கவனத்துக்கு கொண்டு சென்ற கல்லாணைக்கு, சத்யா மீது போலீசில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கல்லாணை ஆதரவாளர்களும் தவெக மகளிர் அணியினரும் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அப்புகாரில், “சத்யா மீது ஏற்கனவே மோசடி புகார் உள்ளது. அதை திசை திருப்ப சிலரின் பின்னணியில் கல்லாணை மீது அவதூறு பரப்புகிறார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளனர்.

இதையும் படிங்க: சிக்கலில் விஜய்! தவெகவின் ஆணிவேரை அசைக்க திமுக திட்டம்!! பக்கா ஸ்கெட்ச்!

இதேநேரம், திமுக இளைஞரணியில் மாவட்ட வாரியாக கிளை, வட்டம், பகுதி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பதவி அறிவிப்பு நடைபெற்று வருகிறது. மதுரையில் வெளியான நிர்வாகிகள் பட்டியலில் வட்டச் செயலர்களின் சிபாரிசுகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

மாறாக, மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு நெருக்கமானவர்களுக்கே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த வட்டச் செயலர்கள் கூறுகையில், “இளைஞரணியில் எங்கள் சிபாரிசு செய்தவர்களுக்கு பொறுப்பு கிடைக்கவில்லை. மாநகராட்சி பகுதியில் கவுன்சிலர்களின் செல்வாக்கே அதிகமாக உள்ளது. இதனால் எங்கள் சிபாரிசு செய்த இளைஞர்கள் பலர் தவெகவுக்கு மாறி வருகின்றனர்.

அதிமுகவில் பதவி கிடைப்பது கடினம் என்பதால், தவெகவுக்கு ரூட்டை மாற்றுகின்றனர். திமுக தலைமை இதில் தலையிட்டு இளைஞர்களை கட்சிக்குள் தக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

மதுரையில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே நிர்வாகிகளை வளைப்பதில் நிலவும் போட்டி, வரும் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் சவாலாக அமையலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: திமுக இளைஞரணியில் புறக்கணிக்கப்படும் வட்ட செயலாளர்கள்!! தவெக பக்கம் திரும்பும் ரூட்! அப்செட்டில் உதயநிதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share