மதுராந்தகம் மக்கள் மீண்டும் அந்தத் தவறை செய்ய மாட்டார்கள்! திருமாவளவனின் கணிப்புக்கு திமுக வேட்பாளர் பதில்!
திமுகவில் யார் தவறு செய்தாலும் அதை கண்டிக்கும் தலைவர் தங்களது தலைவர் என்று கூறிய அவர், திமுகவினர் பேசுவது கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்ற திருமாவளவனின் அறிவுரையை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
காஞ்சிபுரம்: திமுகவினர் பேசும் விதம் கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய அறிவுரையை ஏற்றுக்கொள்வதாக மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றும், அந்த வெற்றிச் செய்தியை திருமாவளவன் விரைவில் அறிவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ. பரந்தாமன் போட்டியிடுகிறார்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்ற பரந்தாமன், அங்கு அமைக்கப்பட்டுள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் களமிறங்குமா திமுக? மு.க.ஸ்டாலின் இன்று எடுக்கப்போகும் முக்கிய முடிவு!
தொடர்ந்து தனது வேட்புமனுவை அண்ணாவின் சிலை முன்பு வைத்து மரியாதை செலுத்திய அவர், பின்னர் வேட்புமனு தாக்கல் செய்தார். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சுந்தர், எம்.பி. செல்வம், கொள்கை பரப்புச் செயலாளர் எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பரந்தாமன், அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தி, அவரது நினைவிடத்தில் வேட்புமனுவை வைத்து வாழ்த்துகளைப் பெற்று தேர்தலை சந்திப்பது தனக்கு பெரும் பாக்கியம் என்றார்.
கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அந்தக் கட்சியினர்தான் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மதுராந்தகம் மக்கள் மீண்டும் அதே தவறை செய்ய மாட்டார்கள் என்றும் கூறினார்.
தவெக கூட்டணி வெற்றி பெறும் என திருமாவளவன் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பரந்தாமன், கூட்டணியின் பெயரில் மட்டுமே தற்போது வெற்றி இருப்பதாகவும், தேர்தல் முடிவில் அது யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை திருமாவளவன் தெரிந்துகொள்வார் என்றும் தெரிவித்தார்.
மேலும், திமுகவில் யார் தவறு செய்தாலும் அதை கண்டிக்கும் தலைவர் தங்களது தலைவர் என்று கூறிய அவர், திமுகவினர் பேசுவது கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்ற திருமாவளவனின் அறிவுரையை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
கடந்த கால இடைத்தேர்தல்களில் திமுக வெற்றி பெற்ற வரலாறு இருப்பதாகவும், எம்ஜிஆர் காலத்தில்கூட இதுபோன்ற வெற்றிகள் திமுகவுக்கு கிடைத்துள்ளதாகவும் பரந்தாமன் குறிப்பிட்டார். மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் வேட்பாளர்களின் பிரசாரப் பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: மதுராந்தகம் இடைத்தேர்தல்: இன்று தொடங்கும் வேட்புமனு தாக்கல்! 9 பறக்கும் படைகள் தயார்! தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம்!