மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இன்று முடியுது வேட்புமனு தாக்கல்! கடைசி வாய்ப்பு!!
வாபஸ் பெறும் காலக்கெடு முடிந்ததும், இரு தொகுதிகளிலும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதன் பின்னரே தேர்தல் களத்தில் எத்தனை வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுகின்றனர் என்பது தெளிவாகும்.
சென்னை: தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைகிறது. இதையடுத்து, தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்க உள்ளது. இரு தொகுதிகளிலும் முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்கியுள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு பிரசாரம் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கியது. தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டு வந்த நிலையில், இன்று தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. தாராபுரத்திலும் இதேபோல் முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளதால், இரு தொகுதிகளிலும் போட்டி விறுவிறுப்படைந்துள்ளது. இடதுசாரி கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
இதையும் படிங்க: அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும், தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது நாளை, செப்டம்பர் 17-ம் தேதி பரிசீலனை நடைபெறும். இதில் தகுதியற்ற அல்லது விதிமுறைகளுக்கு முரணான மனுக்கள் நிராகரிக்கப்படலாம். அதன்பிறகு, போட்டியில் இருந்து விலக விரும்பும் வேட்பாளர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெற செப்டம்பர் 19-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வாபஸ் பெறும் காலக்கெடு முடிந்ததும், இரு தொகுதிகளிலும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதன் பின்னரே தேர்தல் களத்தில் எத்தனை வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுகின்றனர் என்பது தெளிவாகும்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 2026 சட்டசபை தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் பின்னணியில் இந்த இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனால், கட்சிகள் தங்களது பலத்தை வெளிப்படுத்துவதற்கான முக்கிய களமாக இந்த தேர்தலை பார்க்கின்றன.
அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அக்டோபர் 9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைவதால், இனி இரு தொகுதிகளிலும் பிரசார களமே அரசியல் கட்சிகளின் அடுத்த கட்ட கவனமாக மாற உள்ளது.
இதையும் படிங்க: தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்: மதுராந்தகத்தில் சிபிஎம் சுகந்தி, தாராபுரத்தில் சிபிஐ லட்சுமணன் போட்டி!