×
 
☰

மதுராந்தகம், தாராபுரத்தில் ஓட்டுப்பதிவு சரிவு! 11 மணி நிலவரத்தில் திடீர் பின்னடைவு... காரணம் என்ன?

பொதுத்தேர்தலை விட இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்திருப்பது, தேர்தல் களத்தில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.

அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்யாபாமா ஆகியோர் த.வெ.க.,வில் இணைந்ததை தொடர்ந்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்தலுடன் ஒப்பிடும்போது, இரு தொகுதிகளிலும் காலை 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு குறைந்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 689 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 285 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 11 மணி நிலவரப்படி 35.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இதே நேரத்தில் 37.17 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதனுடன் ஒப்பிடும்போது தற்போது 1.62 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

தாராபுரம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 306 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 11 மணி நிலவரப்படி 37.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், கடந்த ஏப்ரல் பொதுத்தேர்தலில் காலை 11 மணிக்குள் 42.45 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதனால் தற்போது 5.17 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

இதையும் படிங்க: இடைத்தேர்தல் எதிரொலி!! 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்! செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களில் அதிரடி உத்தரவு!

தாராபுரத்தில் த.வெ.க., சார்பில் சத்யாபாமா, தி.மு.க., சார்பில் சுகன்யா, அ.தி.மு.க., சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 22 பேர் போட்டியிடுகின்றனர்.

மதுராந்தகத்தில் த.வெ.க., சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க., சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க., சார்பில் கணிதா சம்பத் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதற்கிடையே தட்டாஞ்சாவடி தொகுதியிலும் காலை 11 மணி நிலவரப்படி 39.16 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. பொதுத்தேர்தலை விட இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்திருப்பது, தேர்தல் களத்தில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், இறுதியில் வாக்குப்பதிவு சதவீதம் எந்த அளவுக்கு உயர்கிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மாலை 6 மணிக்கு மேல் வெளியேறணும்! மதுராந்தகம், தாராபுரத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share