டெல்லியில் பாஜக மேலிடம் ஆலோசனை! அண்ணாமலை, எச். ராஜாவிற்கு பதில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!
தமிழக பாஜகவின் 2026 சட்டமன்றத் தேர்தல் வியூகத்தில், அண்ணாமலையின் விலகல் மற்றும் எச். ராஜாவின் உடல்நிலை பாதிப்பு காரணமாகப் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சி நியமித்திருந்த முக்கியத் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியலில் தற்போது அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. கடந்த 30-ஆம் தேதி தமிழ்நாடு பாஜக சார்பில் முக்கியக் கவனம் செலுத்தப்படும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு 11 பேர் கொண்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அண்ணாமலை மற்றும் எச். ராஜா ஆகியோரின் சூழல் காரணமாக இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாததாகியுள்ளது.
முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனது தனிப்பட்டச் சூழல் மற்றும் சில முக்கியக் காரணங்களால் தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுவதாக இன்று செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அண்ணாமலைக்கு ஏற்கனவே சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் பத்மநாபபுரம் ஆகிய முக்கியச் சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த மூத்தத் தலைவர் எச். ராஜா அவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 30 அன்று சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது அவருக்குப் பக்கவாத பாதிப்பு (Stroke) ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே முதுகுளத்தூர், திருப்பத்தூர், விளவங்கோடு மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: குடியரசு தின பாதுகாப்பு: ரயில் நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு வளையம்! 2,500 போலீசார் தீவிர கண்காணிப்பு!
இதனிடையே, ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகனுக்குத் திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூர் வடக்கு மற்றும் உதகமண்டலம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. முக்கியத் தலைவர்களின் இந்தத் திடீர் விலகல் மற்றும் உடல்நலப் பாதிப்பால், அந்தத் தொகுதிகளுக்கான புதிய பொறுப்பாளர்களை நியமிக்க பாஜக தேசியத் தலைமை தற்போது ஆலோசித்து வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமானப் புதியப் பட்டியல் டெல்லி மேலிடத்திடமிருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கையெழுத்து போடு; நிதியைத் தருகிறோம்! மத்திய அரசு பிளாக்மெயில் செய்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசம்!