கார்கே கூறிய தீண்டாமை புகார்! ராஜ்யசபாவில் வெடித்த சர்ச்சை! விசாரணைக்கு உத்தரவிட்ட துணை ஜனாதிபதி!
காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்த தீண்டாமை புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி சிபிஆர் உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்வைத்த தீண்டாமை குற்றச்சாட்டு குறித்து அரசு விசாரணை நடத்தி, உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவை தலைவர் மற்றும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டம் முடிந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, ஸ்ரீ ராம் சேனா தர்மார்த் சேவா அமைப்பைச் சேர்ந்த சிலர் அங்கு பரிகார பூஜை நடத்தியதாக காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. அங்கு பேசிய கார்கே, தான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே தன்னை குறிவைத்து பரிகார பூஜை நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார். இதனால் அவையில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் விவாதம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: ‘நீங்கள் அவை தலைவருக்கு உத்தரவிட முடியாது’! கார்கேவுக்கு கிரண் ரிஜிஜு பதிலடி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!
கார்கேவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, இதுபோன்ற செயல்களை மத்திய அரசு ஒருபோதும் ஆதரிக்காது என்றும், குற்றச்சாட்டு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, மாநிலங்களவை தலைவராக இருந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தீண்டாமை என்பது பாவச்செயல் என்றும், கட்சி அல்லது அரசியல் சித்தாந்தத்தை பொருட்படுத்தாமல் அனைவரும் இதுபோன்ற செயல்களை கண்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கார்கே முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கார்கேவின் புகார் தற்போது அரசியல் விவாதத்தை தாண்டி விசாரணை நடவடிக்கைக்கு சென்றுள்ளதால், இந்த விவகாரம் மீண்டும் தேசிய அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை குறித்து நடைபெறும் விசாரணையின் முடிவே அடுத்தகட்ட நடவடிக்கையை தீர்மானிக்கும்.
இதையும் படிங்க: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு! CBI, ED விசாரணை தீவிரம்! சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் மேல்முறையீடு!