28 ஆண்டுகளாக கட்டி காத்த கட்சி! மம்தா மனவேதனை! இப்படி எல்லாம் கிளப்பி விடாதீங்க!
டெல்லி அரசியல் வட்டாரங்களில், இப்போது பரபரப்பாக அலசப்படும் விஷயம், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ், காங்கிரசுடன் இணையுமா என்பது தான்.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த திரிணமுல் காங்கிரஸ் (திரிணமுல்) கட்சியில் தற்போது பெரும் பூசல் மற்றும் நெருக்கடி நிலவுகிறது. முதல்வர் மம்தா பானர்ஜியின் சொந்த தொகுதியான பவானிபூரிலும் அவர் தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திரிணமுல் கட்சி காங்கிரசுடன் இணையப் போகிறதா என்பது டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு திரிணமுல் லோக்சபா எம்.பி.க்களில் 19 பேர் மம்தாவுக்கு எதிராக தனிக் குழு அமைத்து பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், கட்சியின் மூன்று ராஜ்யசபா எம்.பி.க்களும் ராஜினாமா செய்துவிட்டனர். பல எம்.எல்.ஏ.க்களும் மம்தா மற்றும் அவரது உறவினர் அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக திரும்பியுள்ளனர்.
இதுவரை ராகுல் காந்தியை கிண்டல் செய்து வந்த மம்தா, தோல்விக்குப் பிறகு ‘இண்டி’ கூட்டணி கூட்டத்தில் பங்கேற்று பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினார். சோனியா காந்தியை தனியாகச் சந்தித்து ஒரு மணி நேரம் பேசினார். அபிஷேக் பானர்ஜியும் ராகுல் காந்தியை சந்தித்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: மருமகன் வேணுமா? கட்சி வேணுமா? மம்தாவுக்கு எதிராக போர்க்கொடி! திரிணாமுல் எம்.பிக்கள் 19 பேர் அதிருப்தி!
காங்கிரஸ் தரப்பில் “நீங்கள் ஒரிஜினல் காங்கிரஸ்காரர். உங்கள் கட்சியை காங்கிரசுடன் இணைத்துவிடுங்கள்” என ஆலோசனை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அபிஷேக் பானர்ஜி, “இணைப்பு குறித்து எந்த பேச்சும் நடைபெறவில்லை. இது ஆதாரமற்ற வதந்தி” என மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும் காங்கிரஸ் தரப்பில் “இணைப்பு விவகாரம் விவாதிக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 ஆண்டுகளாக தன் உழைப்பால் கட்டி வளர்த்த கட்சி இப்போது பிளவுபட்டு பரிதாப நிலையில் இருப்பதைப் பார்த்து மம்தா கடும் மனவேதனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. திரிணமுல் கட்சியின் எதிர்காலம் குறித்து அரசியல் வட்டாரங்கள் தீவிரமாக கவனித்து வருகின்றன.
இந்த நெருக்கடி தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பாதிக்குமா என்பதும் ஆர்வத்துக்குரிய விஷயமாக உள்ளது.
இதையும் படிங்க: மம்தா பானர்ஜி - சோனியாகாந்தி சந்திப்பு! காங்., உடன் இணைகிறதா திரிணாமுல் காங்.,?!