செல்வப்பெருந்தகை அவுட்! மாணிக்கம் தாகூர் இன்!! நாளை பதவியேற்பு!! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நாளை பதவியேற்கவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நாளை (ஜூன் 29) அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கிறார். இதற்கான பதவியேற்பு விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விருதுநகர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக உள்ள மாணிக்கம் தாகூர், தற்போது மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாகவும் செயல்பட்டு வருகிறார். மேலும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் அந்தமான்-நிக்கோபார் மாநிலங்களுக்கான காங்கிரஸ் பொறுப்பாளராகவும் அவர் பணியாற்றி வருகிறார். நீண்டகால கட்சி அனுபவம் கொண்ட அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது முக்கிய அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மாநில அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு ஆலோசனைகளை உருவாக்கின. தேர்தல் முடிவுகள் வெளியானதும் அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை தனது பதவியை விலகத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக அவர் தொடர்ந்து அந்தப் பொறுப்பில் இருந்து வந்தார்.
இதையும் படிங்க: அடுத்த தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் யார்? கிரீஷ் ஷோடங்கர் ராஜினாமா! போட்டா போட்டி!
இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைமையகம் புதிய மாநிலத் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, அவரது பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மாணிக்கம் தாகூர் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா, கட்சியின் அடுத்தகட்ட அரசியல் வியூகம் எப்படி அமையும் என்பதில் அரசியல் வட்டாரங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தை இந்த தலைமை மாற்றம் உருவாக்குமா என்பது வரும் நாட்களில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அடுத்த தமிழக காங்., தலைவர் யார்? மாணிக்கம் தாகூருக்கு தமிழக அமைச்சர்கள் சப்போர்ட்!!