×
 

மாணிக்கம் தாகூர் Vsபிரவீன் சக்கரவர்த்தி! தமிழக காங்., தலைவர் பதவிக்கு கடும் மோதல்!

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க, மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பதவிக்கு இரு முக்கிய தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தனது பதவியிலிருந்து விலக உள்ள நிலையில், அவரது மகளின் திருமணம் வரும் 18-ம் தேதி சென்னையில் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களில் அவர் பதவி விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலியாக உள்ள திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களை மனதில் கொண்டு, காங்கிரஸ் மேலிடம் முக்கிய முடிவெடுக்க உள்ளது. 

முதல்வர் விஜய் தலைமையிலான அரசுடன் இணக்கமான உறவைப் பேணி, தகுதி அடிப்படையில் காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு பெற வேண்டும் என டெல்லி உயர்மட்டம் விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதற்காக புதிய மாநிலத் தலைவரை நியமிக்கும் பணியில் காங்கிரஸ் தலைமை தீவிரம் காட்டி வருகிறது.

இதையும் படிங்க: 60 ஆண்டுகள் கழித்து கிடைத்த அமைச்சர் பதவி! கோஷ்டி பூசலால் வரவேற்கக் கூட வராத காங்., தலைவர்கள்!

மேலிடம் தயாரித்துள்ள சாத்தியமான பெயர்களின் பட்டியலில், கட்சியின் காரியக்கமிட்டி உறுப்பினரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் மற்றும் கட்சியின் தரவு பகுப்பாய்வு மற்றும் மேலாண்மைப் பிரிவுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோரின் பெயர்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன. இதனால் இருவருக்கும் இடையே மாநிலத் தலைவர் பதவிக்கான போட்டி தீவிரமடைந்துள்ளது.

மாணிக்கம் தாகூர் கட்சியின் மூத்த தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருப்பதால் அனுபவம் மிக்கவர் எனக் கருதப்படுகிறார். மறுபுறம், பிரவீன் சக்கரவர்த்தி தரவு பகுப்பாய்வு மற்றும் தேர்தல் உத்திகளில் திறமை மிக்கவராக அறியப்படுகிறார். இருவருமே தங்களுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்த டெல்லியில் தீவிர லாபி செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக காங்கிரஸ் இப்போது முக்கிய திருப்புமுனையில் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் கட்சியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தே அடுத்த மாநிலத் தலைவரின் தேர்வு அமையும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. செல்வப்பெருந்தகையின் விலகல் மற்றும் புதிய தலைவரின் வருகை தமிழக காங்கிரஸ் அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: செல்வப்பெருந்தகை சீட்டுக்கு வேட்டு!! தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நான்கு பேர் போட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share