ராவண தேசத்து மாமன்னனாக மாறிய இபிஎஸ்... நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறும் சிவ பக்தர்கள்...!
சிவ புராணத்தை வைத்து எடப்பாடிக்கு போஸ்டர் அடித்ததால் சிவபக்தர்கள் வேதனை
எப்பா இதுக்கெல்லாமா போஸ்டர் அடிப்பீங்க என புருவம் உயர்த்தி பார்க்கும் அளவிற்கு எதுக்கெடுத்தாலும் போஸ்டர் அடிக்கும் கலாச்சாரம் அரசியல் வட்டாரத்தில் அதிகரித்து வருகிறது. கல்யாணமா கட்அவுட், போராட்டமா போஸ்டர், பிறந்தநாள் விழாவா பிளக்ஸ் பேனர் என பந்தாவுக்காக, பதவி ஆசையோடு சர்ச்சைக்குரிய பேனர்களை வைத்து சங்கடத்தை ஏற்படுத்துகின்றனர். அரசியல் தலைவர்களை வருக வருக என வரவேற்று போஸ்டர் அடிப்பதோடு வராத நடிகர்களை வா தலைவா வா என அரசியலுக்கு வரவேற்று போஸ்டரும் அடிக்கிறார்கள்.
அதுவும் அதிமுகவில் போஸ்டர் கலாச்சாரம் நாளுக்கு நாள் விதவிதமான விஸ்வரூபங்களை எடுத்து வருகிறது. இபிஎஸ் Vs ஓபிஎஸ் இடையிலான யுத்த போஸ்டர்கள் கடந்த ஆண்டு வரை வைரலாகி வந்தன. இடையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவை ஒருங்கிணைக்க வலியுறுத்தியும் போஸ்டர்கள் அடிக்கப்பட்டன. தற்போது அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகம் மீட்போம்' என்ற பிரசார பயணத்தை தொடங்கியதில் இருந்தே மாவட்டந்தோறும் அதிமுகவினர் விதவிதமாக பேனர்கள் வைத்தும், போஸ்டர்கள் ஒட்டியும் தடபுடலாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
ஆனால் சமீபத்தில் மானாமதுரையில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் சர்ச்சையே வெடித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிவ புராணத்தை மாற்றி எடப்பாடிக்கு அதிமுகவினர் போஸ்டர் ஒட்டி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவ பக்தர்கள் அதிகம் பாடுவது " சிவ புராணம்" ஆகும். மாணிக்கவாசகர் பாடி திருவாசகத்தில் உள்ள சிவபுராணத்தில் “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் உடையேன போற்றி” என தொடங்கும் பாடலை சிவாலயங்களில் எல்லாம் பாடப்படுவது வழக்கமானது.
இதையும் படிங்க: கண்ணகி நகரை உலக அரங்குக்கு கொண்டு போகணும்! தங்கமகள் கார்த்திகாவுக்கு இபிஎஸ் நேரில் வாழ்த்து...!
மானாமதுரையில் அதிமுகவினர் தேவர் ஜெயந்திக்கு வருகை தந்த “எடப்பாடி பழனிச்சாமியை” வரவேற்று நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். சிவ புராண பாடலில் " தென்னாடுடைய சிவனே போற்றி" என்ற வாசகத்தில் “சிவனே” என்பதை நீக்கிவிட்டு, அதிமுகவினர் “தென்னாடுடைய எடப்பாடியே போற்றி” என அச்சிட்டுள்ளனர். இது சிவ பக்தர்களிடயே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரையில் வி.கே.எஸ்.ராசமூனிஸ்வரன் என்ற அதிமுக நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டரில், “ஏழுமலையானே... ஏழாம்படையானே... ஏழைகளின் பாதுகாவலனே...பெரியாரின் பேரனே! அண்ணாவின் தம்பியே. ராவண தேசத்து மாமன்னனே. தென்னாடுடைய பழனிசாமியே போற்றி. எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி. இந்தியாவின் தலைவா, தமிழ்நாட்டின் முதல்வனே போற்றி, போற்றி” ஆகிய வாசகங்களை பதிவிட்டுள்ளார்.
அந்த போஸ்டரில் சிவபுராணத்தை மாற்றி “எடப்பாடியே போற்றி” என போஸ்டர் ஒட்டியிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக சிவ பக்தர்கள் குமுற ஆரம்பித்துள்ளனர். முழு முதற் கடவுளான சிவனுடன் தன்னை ஒப்பிட்டு இப்படி போஸ்டர் ஒட்டுவது தவறு. “ராவண தேசத்து மாமன்னனே” என எடப்பாடியை குறிப்பிட்டுள்ளனர். ராவண தேசம் என்பது இலங்கையைக் குறிக்கும். இது போன்ற தவறான போஸ்டர்கள் இளைய தலைமுறையினரை பாதிக்கும். இதனை தவிர்க்க அனைத்து அரசியல் கடசியினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவ பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: MGR சிலை உடைப்பு... உடனடியா நடவடிக்கை எடுங்க... பொங்கி எழுந்த EPS...!