நள்ளிரவில் நடந்த திடீர் ஆய்வு! அமைச்சரிடம் சிக்கிய கும்பல்!! அதிரடியாய் பாய்ந்தது நடவடிக்கை!
பள்ளிப்பாளையத்தில், நள்ளிரவில் அமைச்சர் நடத்திய சோதனையில், விதிமீறலால் வைக்கப்பட்ட சீலை உடைத்து, சாய ஆலைகள் இயங்கியது கண்டறியப்பட்டது.
பள்ளிப்பாளையம்: சீல் வைக்கப்பட்ட சாய ஆலைகளை நள்ளிரவில் உடைத்து இயக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதிகளில் அமைச்சர் விஜயலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டபோது இந்த விதிமீறல் அம்பலமானது.
கடந்த மாதம் 3-ஆம் தேதி சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி ஆகியோர் பகுதியில் ஆய்வு செய்தபோது, விதிமீறி செயல்பட்டு வந்த சாய ஆலைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
அதன்படி குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பல ஆலைகளுக்கு சீல் வைத்தனர். இதனால் தொழில் முழுமையாக முடங்கும் நிலை ஏற்பட்டதால், பள்ளிப்பாளையம் பகுதி சாய ஆலை உரிமையாளர்கள் அமைச்சர் விஜயலட்சுமியை கடந்த 15-ஆம் தேதி சந்தித்து கால அவகாசம் கோரினர். அமைச்சரும் ஒரு மாத கால அவகாசம் வழங்கினார்.
இதையும் படிங்க: பள்ளி ஐ.டி. கார்டில் சாதி... ஒரே நாளில் டோட்டல் சீனையே மாற்றிய அமைச்சர் செங்கோட்டையன்...!
ஆனால், சில ஆலை உரிமையாளர்கள் அந்த அவகாசத்தை மீறி, இரவு நேரத்தில் சீலை உடைத்து ஆலைகளை இயக்கி வந்ததாக அமைச்சருக்கு புகார் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு அமைச்சர் விஜயலட்சுமி ஒட்டமெத்தை மற்றும் ஆவத்திபாளையம் பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது சீல் உடைக்கப்பட்டு இரண்டு சாய ஆலைகள் முழு அளவில் இயங்கி வருவதை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அமைச்சர் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். “விதிமீறி செயல்படும் எந்த ஆலையும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழலை பாதிக்கும் செயல்களை அரசு ஒருபோதும் அனுமதிக்காது” என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நான்கு குழுக்களாக பள்ளிப்பாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இதில் விதிமீறி செயல்பட்ட 20 சாய ஆலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஆலைகளின் மின் இணைப்பு நேற்று துண்டிக்கப்பட்டது.
பள்ளிப்பாளையம் பகுதி சாய தொழில்துறை பெரும் அளவில் செயல்படும் இடம் என்பதால், இந்த நடவடிக்கை அப்பகுதி தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தொழில் வளர்ச்சி ஆகிய இரண்டையும் சமநிலைப்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சாய ஆலைகள் மீதான கண்காணிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அது தேவையே இல்ல! கொளுத்திப்போட்ட செங்கோட்டையன்! கொந்தளித்த அன்பில் மகேஷ்!!