அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்.. எதிர்பார்ப்பில் பகுதிநேர ஆசிரியர்கள்..!
பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், கணினி அறிவியல், தோட்டக்கலை மற்றும் வாழ்வியல் திறன் போன்ற பாடங்களை கற்பிக்க, 2012-ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் 16,500-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். மேலும் இவர்களின் பணி தற்காலிகமானது என்று அரசு அறிவித்திருந்தது. தற்போது, தமிழ்நாட்டில் சுமார் 12,000 முதல் 13,000 பகுதி நேர ஆசிரியர்கள், மாதம் 12,500 ரூபாய் ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருவதுடன், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனை அடுத்து 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தது.
இதையும் படிங்க: அதை ஒரு கட்சியாவே நாங்க நினைக்கல - தவெகவை அசிங்கப்படுத்திய திமுக அமைச்சர்...!
ஆனால் இதுவரை பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இதனால் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு வடிவங்களில் அடிக்கடி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் அருகே 12வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பகுதி நேர ஆசிரியர்களின் நியமனம் மற்றும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என அவர் உறுதியளித்தார்.
மேலும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின்போது அவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அந்த கோரிக்கைகள் தமிழக முதலமைச்சரிடம் கொண்டு செல்லப்பட்டு பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறினார். இது பகுதி நேர ஆசிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசு கல்வியில் தரத்தை உயர்த்துவதற்கு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மாணவர்களின் நலனை மையப்படுத்தி, தமிழக அரசு தொடர்ந்து ஆசிரியர்களுக்கு ஆதரவளிக்கும் எனவும், கல்வியில் மொழி அரசியலை மத்திய அரசு திணிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.
முன்னதாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சிகளை வலுப்படுத்த உத்தரவிட்டார். மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பின், அதற்கு தகுந்த மாத்திரைகள் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரின் இந்த அறிவிப்புகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயனளிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அண்ணா,பெரியாரை விமர்சித்து வீடியோ.. அடிமை சாசனம் எழுதி கொடுத்த அதிமுக! சேகர்பாபு கடும் விமர்சனம்..!