'முதல்வர் விஜயின் நல்ல மனதிற்கு இயற்கையே துணை'! காவிரி நீர்வரத்து அதிகரித்த நிலையில் அமைச்சர் கீர்த்தனா உருக்கம்!
காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், முதல்வர் ஜோசப் விஜயின் மக்கள் நல எண்ணத்திற்கு இயற்கையே துணை நிற்கிறது என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே மீண்டும் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ள நிலையில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றுள்ளது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில், தமிழகத்திற்கு தினமும் 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில் கர்நாடகத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால் கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து வேகமாக அதிகரித்து, உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், அணைகள் நிரம்பி வருவதால் உபரி நீரை திறந்துவிடுவது அவசியம் என்றும், "இயற்கை யாருக்கும் சொந்தமல்ல" என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: காவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீர் திடீர் குறைப்பு! 25,000 கனஅடியில் இருந்து 9,958 கனஅடியாக சரிவு!
அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:
"இயற்கையின் அருள் எப்போதும் மக்களின் நலனுக்கே துணை நிற்கிறது. கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால், காவிரியில் நீர்வரத்து அதிகரித்து, டெல்டா விவசாயிகளின் பாசனத் தேவைகள் பூர்த்தியாகும் சூழல் உருவாகியுள்ளது. எத்தனை இடையூறுகளும், எத்தனை தடைகளும் வந்தாலும், மக்களின் நலனையே சிந்திக்கும் நம் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அண்ணனிளின் நல்ல மனதிற்கு இயற்கையே துணை நிற்கிறது.
மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு நல்ல முயற்சிக்கும் இயற்கையின் ஆசீர்வாதம் என்றும் இருப்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது. இதன் மூலம் காவிரி டெல்டா விவசாயிகளின் குறுவை, சம்பா சாகுபடிகள் செழித்து வளர்ந்து, விவசாயிகளின் இல்லங்களில் வளமும் மகிழ்ச்சியும் பெருக இறைவனை மனமார வேண்டுகிறேன். 'நல்ல மனமும், மக்கள் நல எண்ணமும் இருக்கும் இடத்தில் இயற்கையும் துணையாக நிற்கும்.'"
இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில், காவிரி நீர்வரத்து அதிகரித்திருப்பது டெல்டா விவசாயிகளுக்கு நம்பிக்கையை அளித்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எங்களுக்கே விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை! அணை நிரம்புறப்போ திறந்து விடுறோம்! கர்நாடகா மீண்டும் மறுப்பு!