அறுவை சிகிச்சை முடிந்து 4 நாளில் பணிக்கு திரும்பிய அமைச்சர்! கீர்த்தனா குறித்து கனிமொழி சந்தோஷ் உருக்கமான பதிவு!
அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் கருத்தைத் தொடர்ந்து இந்த விவாதம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னை: அமைச்சர் கீர்த்தனாவுக்கு கழுத்தின் கீழ் தோள்பட்டையை மார்பு எலும்புடன் இணைக்கும் காரை எலும்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், மருத்துவர்கள் 20 நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியதாகவும், ஆனால் நான்கு நாட்களிலேயே அவர் மீண்டும் பணிக்கு திரும்பியதாகவும் கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அமைச்சர் கீர்த்தனாவை நேரில் சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் சுமார் 20 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியிருந்ததாகவும், ஆனால் மாநிலப் பணிகள் காரணமாக நான்காவது நாளிலேயே அவர் மீண்டும் பணிக்கு திரும்பியதாகவும் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் இருந்தபோதும் முதலமைச்சரின் லண்டன் பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்து கீர்த்தனா தொடர்ந்து கவனம் செலுத்தியதாக கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தைகள், சந்திப்புகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான பணிகள் சரியான நேரத்தில் நடைபெறுகிறதா என்பதிலேயே அவரது கவனம் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: புதிய தலைமை செயலகம் கட்ட வாஸ்து! திணறும் அதிகாரிகள்! மாற்று இடம் தேர்வில் தமிழக அரசுக்கு சிக்கல்!
இதற்கிடையே, கீர்த்தனா சில நாட்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது தொடர்பாக அரசியல் விவாதம் எழுந்த நிலையில், அவரது உடல்நிலையை விசாரிப்பதற்குப் பதிலாக அதை மாதவிடாயுடன் தொடர்புபடுத்திப் பேசுவது குறித்து கனிமொழி சந்தோஷ் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் கருத்தைத் தொடர்ந்து இந்த விவாதம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பெண்களின் உடல்நிலையை அரசியல் விமர்சனத்துக்கான பொருளாக மாற்றக்கூடாது என்றும், அவர்கள் நோய், காயம் உள்ளிட்ட சூழ்நிலைகளையும் சமாளித்துக்கொண்டு பொது வாழ்க்கையில் செயல்படுவதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கனிமொழி சந்தோஷ் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கீர்த்தனா தனது உடல்நிலை குறித்த தகவல்களை பொதுவெளியில் வெளியிட விரும்பவில்லை என்பதை அறிந்திருந்தும், அவருடைய பணிப்பற்று குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக கனிமொழி சந்தோஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநர்-முதல்வர் மோதல் இல்லை!! துணைவேந்தர் விவகாரத்தில் அமைச்சர் விஸ்வநாதன் சொன்ன முக்கிய தகவல்!