பழனி கோயில் நில மோசடி... தீயாய் பரவிய வதந்தியால் டென்ஷன் ஆன அமைச்சர் ரமேஷ்... அறநிலையத்துறை எச்சரிக்கை...!
பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் மீது விரைவில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
பழனி கோயில் நில விவகாரம் தொடர்பாக அமைச்சர் ரமேஷ் குறித்து அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மடத்திற்குச் சொந்தமான நிலத்தை சில தனிநபர்கள் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மடத்திற்குச் சொந்தமான நிலத்தை சில தனிநபர்கள் சட்டவிரோதமாக பதிவு செய்ய முயன்றது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை ஏற்கனவே உரிய நிர்வாக நடவடிக்கைகளையும், காவல்துறை விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே படுக்கையில் 3 நோயாளிகள்..! அவ்ளோ அலட்சியமா..? வறுத்தெடுத்த நயினார் நாகேந்திரன்..!!
மேலும், அந்த நிலம் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அந்த நிலத்தை யார் பதிவு செய்யக் கோரினாலும் பதிவு செய்யக் கூடாது என்று பழனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இயங்குபவர்கள் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அமைச்சரின் உறவினர்கள் என்றும், அமைச்சருக்கு தெரிந்தே இந்த சம்பவம் நடந்ததாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அமைச்சருடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு விவகாரத்தில், திட்டமிட்டு அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பிய நபர்கள் மற்றும் அதனை வெளியிட்ட சமூக வலைதள கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் மீது விரைவில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் புகாரில் சிக்கிய TVK நிர்வாகி... தர்ம அடி வாங்கிய சம்பவம்..! கனிமொழி MP கண்டனம்..!!