தாராபுரத்தில் அமைச்சரை ரவுண்ட் கட்டிய வாக்காளர்கள்... அதிமுக - தவெகவினர் இடையே தள்ளுமுள்ளு...!
தாராபுரம் இடைத்தேர்தல் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சரை தடுத்து வாக்குவாதம். அதிமுக தவெக இடையே தள்ளுமுள்ளு பரபரப்பு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக சத்தியபாமா அறிவிக்கப்பட்டுள்ளார் இவர் கடந்த முறை தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார் இதன் காரணமாக இந்த பகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது இதில் தமிழக வெற்றி கழக வேட்பாளராக சத்தியபாமா அறிவிக்கப்பட்டார். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தாராபுரம் நஞ்சியம்பாளையம் கிராமத்தில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளருக்கு ஆதரவாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரி அப்பகுதி பொதுமக்கள் அவரை அணுகினர். அப்போது அங்கிருந்த அதிமுகவினர் அமைச்சரை முற்றுகையிட்டு, தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக மற்றும் தவெக நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இரண்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. உடனடியாக விரைந்து வந்த போலீசார் இரண்டு தரப்பினரையும் விலக்கினர். தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்சாரக் களத்தில் அதிமுக மற்றும் தவெக வினர் நேரடியாக மோதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!
சத்யபாமாவிற்கு தொடரும் எதிர்ப்பு:
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமா, குண்டடம் ஒன்றியம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி நந்தவனம்பாளையம், தும்பலப்பட்டி, வெறுவேடம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டபோது, சில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து சத்யபாமா தனது பிரசாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது.
செப்டம்பர் 23ஆம் தேதி பெரிய குமாரபாளையம் பகுதியில் சத்யபாமா வாக்கு சேகரித்தபோதும், அங்கு திரண்டிருந்த பொதுமக்களில் சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சத்யபாமாவுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்யபாமா வேட்புமனு தாக்கல் செய்தபோதும் அதிமுகவினர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தவெகவில் பதவி! 15 புதிய துணை பொதுச் செயலாளர்களை நியமித்தார் முதல்வர் விஜய்!