×
 

தியேட்டருக்குள் தமிழ்நாட்டு அமைச்சரவை.. தலைமைச் செயலகம் வராத சி.எம்.விஜய்... ஜனநாயகன் திருவிழா ‘படு ஜோரு’...!

வழக்கமாக அரசு வெளியிடும் அன்றைய நிகழ்ச்சி நிரலிலும் குறிப்பிடத்தக்க அரசு நிகழ்வுகள் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர்கள் திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படத்தை கண்டு ரசித்து வருகின்றனர். 

தவெக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன் இன்று காலை  தமிழ்நாட்டில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ்நாடின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர்கள் ஒவ்வொருவராக திரையரங்குகளுக்குச் சென்று ஜனநாயகன் திரைப்படத்தைப் கண்டு ரசித்து வருகின்றனர். அதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் உள்ளவரும், கட்சியின் பொதுச் செயலாளருமான என். ஆனந்த், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜுடன் இணைந்து ரோகிணி திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்த்துள்ளார். மேலும் இருவரும் இணைந்து எடுத்த செல்பி புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். 

இதையும் படிங்க: எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய்!! தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று சம்பவம்! ‘ஜன நாயகன்’ புதிய சாதனை!

அதேபோல், புதுக்கோட்டையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் திரைப்படத்தைப் பார்த்தபோது அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

மேலும், அமைச்சர்கள் ஜெயஸ்ரீ, ஜெகதீஸ்வரி உள்ளிட்டோரும் பல்வேறு திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படத்தைப் பார்த்துள்ளனர். இதுபோல் பல அமைச்சர்கள் தாங்கள் திரைப்படத்தைப் பார்த்த காட்சிகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

இது குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அமைச்சர்கள் சமூக வலைதளங்களில் இவ்வாறு பதிவுகளை வெளியிடுவது, தங்களது ஆதரவையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்தும் நடவடிக்கையாக சிலர் பார்க்கின்றனர்.

இதற்கிடையில், வழக்கமாக மக்கள் மற்றும் அதிகாரிகளின் வருகையால் பரபரப்பாகக் காணப்படும் தலைமைச் செயலகம் இன்று ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், வழக்கமாக காலை 10 மணிக்குள் தலைமைச் செயலகம் வரக்கூடிய முதலமைச்சர் இன்று இதுவரை வரவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலை முதலமைச்சர், தலைமைச் செயலாளர், அவரது தனிச் செயலாளர்கள் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குடும்பத்தினருடன் அடையாறில் உள்ள தனியார் முன்னோட்ட (Preview) திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்த்ததாகவும், அங்கிருந்து அவர்கள் வெளியேறிய காட்சிகள் செய்திகளில் வெளியாகியிருந்தன. குறிப்பாக எம்.எல்.ஏ. பல்லவி கைக்குழந்தையுடன் ஜனநாயகன் படம் பார்க்க தியேட்டருக்குச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக திரையரங்குகளுக்குச் சென்று முதல் காட்சியைப் பார்த்து, தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.

மற்றொரு புறம், டெல்லியில் நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டிலும் நீட் முறைகேடு மற்றும் கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளை சீர்செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், அமைச்சர்கள் திரைப்படம் பார்ப்பதிலும், அதுதொடர்பான கொண்டாட்டங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதிலும் கவனம் செலுத்துவது குறித்து சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

மேலும், நேற்று மதியம் முதல் இன்று வரை முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும், வழக்கமாக அரசு வெளியிடும் அன்றைய நிகழ்ச்சி நிரலிலும் குறிப்பிடத்தக்க அரசு நிகழ்வுகள் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால், சமூக வலைதளங்களில் சிலர், "இன்று அரசு நிர்வாகத்தின் முழு கவனமும் ஜனநாயகன் திரைப்படத்தின் மீதே திரும்பியுள்ளதா?", "தலைமைச் செயலகம் திரையரங்காக மாறிவிட்டதா?" என்ற கேள்விகளை எழுப்பி பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: TITLE CARD-லயே BLAST-U..!! "CM ஜோசப் விஜய்"..! கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share