தவெக MLA- க்கள் சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்பு..! வாழ்த்திய அமைச்சர்கள்..!!
சபாநாயகர் பிரபாகர் முன்னிலையில் புதிய எம். எல்.ஏக்கள் பதவியேற்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்ற நிகழ்வு, தமிழக அரசியலில் புதிய அத்தியாயமாக அமைந்தது. மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சத்தியபாமா ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் என். ஆனந்த், கே.ஏ. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி. அருண்ராஜ், மரிய வில்சன், ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று புதிய எம்.எல்.ஏ.க்களை வரவேற்றனர்.இந்த இரண்டு தொகுதிகளும் முன்பு அதிமுக சார்பில் வெற்றி பெற்றவை. பொதுத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களாக போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேலும் சத்தியபாமாவும், பதவியேற்ற சில நாட்களிலேயே தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தனர்.
இதையடுத்து காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் இருவரும் தவெக சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றனர். மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் சுமார் இருபதாயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், தாராபுரத்தில் சத்தியபாமா சுமார் ஒன்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர். இந்த வெற்றி தவெகவுக்கு முதல் இடைத்தேர்தல் வெற்றியாகவும் அமைந்தது.பதவியேற்பு நிகழ்ச்சியில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இருவருக்கும் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதையும் படிங்க: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு! மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!
வெற்றிச் சான்றிதழை அளித்த பிறகு அவர்கள் எம்.எல்.ஏ.க்களாகக் கையெழுத்திட்டனர். இந்தப் பதவியேற்பின் மூலம் சட்டமன்றத்தில் தவெகவின் பலம் 109 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு சபாநாயகர் உள்பட 107 உறுப்பினர்களுடன் இருந்த தவெக, இந்த இரண்டு இடங்களையும் கைப்பற்றியதன் மூலம் மேலும் வலுப்பெற்றுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. தற்போது சில தொகுதிகள் காலியாக இருப்பதால் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
இதையும் படிங்க: பச்சிளம் குழந்தைகள் பகடைக்காயா.? உதய் மீது வழக்கு... MLA கனிமொழி சந்தோஷ் தாக்கு..!!