டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்!! மோடி அழைப்பை நிராகரித்த ராகுல்காந்தி! இதுதான் காரணம்?!
மேற்காசியப் போர் மற்றும் அதனால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து விவாதிக்க இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.
டெல்லி: மேற்காசியாவில் தொடரும் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் இந்தியாவை பெரிதும் பாதிக்கும் அபாயம் உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம், எண்ணெய்-எரிவாயு இறக்குமதி, ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு, அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
மத்திய அரசு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், சாத்தியமான பொருளாதார தாக்கங்களை குறைக்கவும் அரசு ஏற்கெனவே ஏழு அதிகாரம் பெற்ற குழுக்களை அமைத்துள்ளது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்... 242 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி... தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!
நேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில், முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், டி.ஆர்.டி.ஓ தலைவர் சமீர் காமத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலை முழுமையாக ஆராயப்பட்டது. இந்த ஆய்வுக்குப் பிறகே அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். கேரளாவில் முன்கூட்டியே திட்டமிட்ட பணிகள் இருப்பதால் வர முடியவில்லை என அவர் கூறியுள்ளார். “கூட்டம் நடக்கட்டும், ஆனால் விவாதம் பாராளுமன்றத்தில் நடக்க வேண்டும்” என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
மேற்காசியப் போர் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி நாடு என்பதால், பெட்ரோல்-டீசல் விலை, உர விலை, உணவுப் பொருள் விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். வளைகுடா நாடுகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பும் பெரும் கவலையாக உள்ளது.
பிரதமர் மோடி ஏற்கெனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசி, அமைதிக்கு இந்தியா ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணையின் திறப்பும் பாதுகாப்பும் உலகுக்கே அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஒரே குரலில் நாட்டின் நலனுக்கு ஆதரவு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று உலக நாடுகள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்தியா தனது பொருளாதாரம், எரிசக்தி மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய திட்டங்களை வகுக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பேச்சுவார்த்தையை விரும்பும் ஈரான்? படைகளை அனுப்பும் US?! மேற்காசியாவில் தொடரும் போர் பதற்றம்!!!