சிவகங்கையில் மெகா முதலீடு! ரூ.5,300 கோடியில் அமைகிறது எம்.ஆர்.எஃப் (MRF) டயர் ஆலை!
சிவகங்கை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில், எம்.ஆர்.எஃப் (MRF) நிறுவனம் மிகப்பெரிய முதலீட்டை அறிவித்துள்ளது.
தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக, சிவகங்கை மாவட்டத்தில் பிரம்மாண்டமான டயர் உற்பத்தி ஆலையை அமைக்க எம்.ஆர்.எஃப் (MRF) நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான ரூ.5,300 கோடி மதிப்பிலானப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
எம்.ஆர்.எஃப் நிறுவனம் சிவகங்கை மாவட்டத்தில் தனது உற்பத்தித் திறனை விரிவாக்கம் செய்ய மொத்தம் ரூ.5,300 கோடி முதலீடு செய்ய உள்ளது. சிவகங்கை மாவட்டம், இலுப்பைக்குடி சிப்காட் (SIPCOT) தொழில் பூங்காவில் இந்த புதிய டயர் உற்பத்தி ஆலை அமைய உள்ளது. இதற்காகப் போதிய நிலப்பரப்பை ஒதுக்கீடு செய்ய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வரும்போது, சுமார் 1,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், ஆயிரக்கணக்கானோருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிவகங்கை மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதையும் படிங்க: பேரதிர்ச்சி..!! மஞ்சுவிரட்டு போட்டியில் நேர்ந்த சோகம்...! மூன்று பேர் உயிரிழப்பு..!!
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியைத் தொடர்ந்து, சிவகங்கையிலும் இத்தகையப் பெரிய முதலீடுகள் வருவது, தென் தமிழகத்தை ஒரு தொழில் மையமாக (Industrial Hub) மாற்றும் தமிழக அரசின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தப் புதிய ஆலை மூலம் இந்தியாவின் டயர் ஏற்றுமதி சந்தையில் தமிழகத்தின் பங்கு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விசில் ஊத தடை! சிவகங்கை திமுக கவுன்சிலரின் செயலால் தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி!