×
 

மழையில் நனைந்தபடி போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய இளம்பெண்... வைரல் ரியாவின் முழு பின்னணி இதோ!

மும்பையில் மழையில் நனைந்தபடி காவல்துறை வாகனத்தை ஒற்றை ஆளாக ஓர் இளம்பெண் தடுத்தி நிறுத்திய விடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர் யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.

மும்பையில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தின் போது, மழையில் நனைந்தபடி காவல்துறை வாகனத்தை ஒற்றை ஆளாக தடுத்து நிறுத்திய இளம்பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த துணிச்சலான செயலை செய்தவர் யார் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. அவரது பெயர் ரியா அஹிர்.

27 வயதான ரியா அஹிர், மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ரியா யாதவ் என்ற பெயரிலும் அறியப்படும் இவர், ராணுவ பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். உளவியல் பட்டப்படிப்பு முடித்துள்ள ரியா, ஆன்லைன் மூலம் ஆடை விற்பனை செய்யும் சிறு தொழில் நடத்தி வருகிறார். மேலும் நாடகக் கலை, நடனம், மாடலிங் உள்ளிட்ட துறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தி மும்பை தாதர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் ரியா பங்கேற்றார். கடந்த ஜூலை 22-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட சில இளைஞர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, ரியா அந்த வாகனத்தின் முன் சென்று நின்று அதை தடுத்து நிறுத்தினார்.

இதையும் படிங்க: டெல்லி போராட்டத்தில் திடீர் அதிர்ச்சி... சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கேவுக்கு டைபாய்டு காய்ச்சல்!

காவல்துறை வாகனம் நகர முடியாத அளவுக்கு சுமார் 40 நிமிடங்கள் அவர் அங்கேயே நின்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு கூடிய போராட்டக்காரர்கள் ரியாவுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் காவல்துறை வாகனத்தில் இருந்த சில போராட்டக்காரர்கள் வெளியே வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ரியா கூறுகையில், கைது செய்யப்பட்ட இளைஞர்களை அழைத்துச் செல்ல போலீசாரிடம் உரிய உத்தரவு உள்ளதா என கேட்டதாகவும், தெளிவான பதில் கிடைக்காததால் அவர்களைத் தடுக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். போலீசாரை எதிர்த்து நிற்பது தனக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும், தான் செய்வது சரி என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து நின்றதாகவும் அவர் கூறினார்.

தான் மாணவி இல்லை என்றும், தனிப்பட்ட முறையில் எந்த பாதிப்பும் இல்லாத நிலையிலும் மாணவர்களின் பிரச்சினைக்காக போராட்டத்தில் இணைந்ததாகவும் ரியா தெரிவித்துள்ளார். நீட் விவகாரத்தில் இளைஞர்களின் குரல் கேட்கப்பட வேண்டும் என்றும், ஜனநாயக முறையில் எதிர்ப்பை பதிவு செய்வது அனைவரின் உரிமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரியாவின் இந்த செயல் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. துணிச்சலுடன் தனது கருத்தை வெளிப்படுத்திய பெண் என்ற வகையில் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில், போராட்டங்கள் மற்றும் காவல்துறை நடவடிக்கைகள் தொடர்பான முழு சூழலை விசாரிப்பதும் அவசியம் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: நீட் போராட்டத்துக்கு பெற்றோர் தங்களது குழந்தைகளை அனுப்ப வேண்டாம்! பலிகடாவாக்காதீர்கள்! நடிகர் ரஞ்சித் சாடல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share