மாணவி படுகொலையில் போலீசுக்கு அழுத்தம்... தவறான குற்றவாளிகள் சேர வாய்ப்பு..! கோர்ட் எச்சரிக்கை..!!
மாணவி கொலை வழக்கில் அதிக அழுத்தம் கொடுப்பது விசாரணையை பாதிக்கும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ் டூ மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மாணவி பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதி வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் வீட்டிலிருந்து அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக்காக தனியாகச் சென்றுள்ளார்.
ஒரு மணி நேரத்துக்குப் பிறகும் திரும்பாததால், பெற்றோரும் உறவினர்களும் தேடியபோது கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலில் முகத்தில் பலத்த காயங்கள், சிதைவுகள் இருந்ததுடன், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்ததாக கூறப்பட்டுள்ளது. கொலை மிகவும் கொடூரமான முறையில் நிகழ்த்தப்பட்டிருப்பதாக கிராம மக்களும் உறவினர்களும் குற்றம் சாட்டினர். மாணவி காணாமல் போனதை அறிந்த பெற்றோர் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர்.
ஆனால், அங்கு முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், புகாரை ஏற்க மெத்தனமாக நடந்து கொண்டதாகவும், காவல் ஆய்வாளர் அவதூறாகப் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பள்ளி மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. ஒரு குற்ற வழக்கில் காவல்துறைக்கு அதிக அழுத்தம் கொடுப்பதால் தவறான குற்றவாளிகளை சேர்க்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது. அதிக அழுத்தம் கொடுப்பது விசாரணையை பாதிக்கும் என்றும் கொலை விவகாரங்களில் அறிவியல் பூர்வமான தரவுகளை சேகரிக்க அவகாசம் தேவைப்படும் என்றும் தெரிவித்தது. அதே நேரத்தில் இது போன்ற புகார்களை காவல்துறையினர் மெத்தனமாக கையாள்வது ஏற்கத்தக்கதல்ல என்றும் தெரிவித்தது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் படுகொலை... ரவுடி சம்போ செந்திலுக்கு உதவியவரிடம் தீவிர விசாரணை..!!
எனவே அறிவியல் ரீதியாக இந்த வழக்கை போலீசார் விசாரித்து, உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்றும் கூறியுள்ளது. அப்போது, விளாத்திகுளத்தில் பிரேதப் பரிசோதனை முடிந்து, தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருவதாக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டதை அடுத்து விசாரணை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... ஜாமீன் ரத்துக்கு இடைக்கால தடை.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!!