என் பேச்சை திரித்து சித்தரிக்கிறார்கள்! முதல்வர் விஜய்யை இழிவுபடுத்தவில்லை!” சர்ச்சைக்கு நயினார் நாகேந்திரன் விளக்கம்
முதல்வர் விஜய் குறித்து இழிவாகப் பேசியதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த சர்ச்சைக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். தான் யாரையும் உள்நோக்கத்துடன் குறிப்பிட்டு பேசவில்லை என்றும், தனது பேச்சைத் திரித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பத்திரிகை வெளியீட்டு விழாவில் மேடையில் தான் பேசிய கருத்துகள் தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு தான் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தாய், தாய்நாடு மற்றும் தாய்மொழி மீது மிகுந்த அக்கறை கொண்டவன் தான் என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'மோடியிடம் ஒரு வார்த்தையாவது பேசினீர்களா?'... நயினார் நாகேந்திரனிடம் நேரடியாக சவால் விட்ட மாணிக்கம் தாகூர்!
இதற்கிடையே, சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பேசியதாக வெளியான கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தின.
சட்டப்பேரவையில் ‘அப்பா எங்கே?’ என்று தேடினால் எப்படி தெரியும் என்றும், வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் கேட்டால்தான் அப்பா யார் என்பது தெரியும் என்றும் அவர் பேசியதாக கூறப்படுகிறது. இந்தப் பேச்சு முதல்வர் விஜய்யை மறைமுகமாக இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சமூக வலைதளங்களிலும் நயினார் நாகேந்திரனின் பேச்சு தொடர்பான வீடியோ மற்றும் கருத்துகள் வேகமாக பரவின. இதையடுத்து, அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் மீது வழக்கறிஞர் வர்த்தினி என்பவர் தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவர் பேசிய கருத்துகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருபுறம் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மறுபுறம் தனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக அவரே விளக்கம் அளித்திருப்பது இந்த விவகாரத்தை மேலும் அரசியல் விவாதமாக்கியுள்ளது.
முதல்வர் விஜய்யை அவர் நேரடியாகக் குறிப்பிட்டு பேசினாரா அல்லது அரசியல் விமர்சனத்தின் ஒரு பகுதியாக அந்த கருத்து தெரிவிக்கப்பட்டதா என்பது தொடர்பான விவாதம் தற்போது தமிழக அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது.
இதையும் படிங்க: பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை ஆதரவாளர்கள்! நயினார் முக்கிய ஆலோசனை! அதிரடி உத்தரவு!