அமலாக்கத்துறை மீது உதயநிதிக்கு பயம்... கடந்த காலத்தை நினைவூட்டிய நயினார்!!
ராஜ்யசபா தேர்தல், கூட்டணி ஆகியவற்றை பற்றியெல்லாம் தனிப்பட்ட முறையில் நான் சொல்ல முடியாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டாஸ்மாக் ஊழல் குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். அந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக துணை முதலமைச்சரின் நண்பர்கள் ரித்தீஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரை விசாரித்தால் உண்மை தெரியும் என்று அமலாக்கத் துறை ஏற்கனவே கூறியுள்ளது. ஆனால் அவர்கள் இருவரும் லண்டன் சென்று விட்டனர். இன்னும் சிலர் அவர்கள் லண்டன் எல்லாம் செல்லவில்லை, இங்கு தான் தலைமறைவாக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.
இடைக்கால தடை வாங்கப்பட்டிருப்பதால் அதைப்பற்றி விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் நாங்கள் ED-க்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று வசனம் பேசுகிறார். ஆனால் 2011 சட்டமன்ற தேர்தலின் போது, அங்கு கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. மாடியில் அமலாக்கத்துறை ரெய்டும், கீழே கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. அன்றைக்கும் அமலாக்கத்துறைக்கு பயந்து தான் பேச்சுவார்த்தையை முடித்தார்களா என தெரியவில்லை. அதனால் உதயநிதிக்கு அப்போதிருந்தே அமலாக்கத்துறை மீது பயம் உள்ளது. அப்படி பயம் இல்லை என்றால் ரித்திஷ், ஆகாஷ் ஏன் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும். எந்த ஆட்சி நடைபெற்றாலும் உரிய நீதி வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு.
இதையும் படிங்க: புதிய எம்.ஜி.ஆர். பவன் கல்யாண்.. நயினார் நாகேந்திரன் குதூகலமாக அறிவிப்பு.!!
ராஜ்யசபா தேர்தல், கூட்டணி ஆகியவற்றை பற்றியெல்லாம் தனிப்பட்ட முறையில் நான் சொல்ல முடியாது. அதுகுறித்து எங்களின் தலைமை முடிவு செய்யும். எங்களிடம் தற்போது 4 சீட்கள் உள்ளன. ராஜ்யசபா தேர்தல் குறித்து தலைமையில் என்ன உத்தரவு கொடுக்கிறார்களோ அதை பின்பற்றுவோம். நாங்கள் திமுக ஆட்சியில் மக்களுக்கு ஏராளமான சிரமங்கள் இருக்கின்றன என்று நான் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு ஆகியவற்றால் தொழில்துறை முடங்கியுள்ளது.
பலருக்கு தொழிற்சாலையை நடத்த முடியாத நிலை நெருக்கடி உள்ளது. கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து, போதைப் பொருள் பழக்கம் ஆகியவற்றால் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளது. திமுக ஆட்சி என்பது மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. இந்தப் பிரச்னைகளுக்கு எதிராக அனைத்து கட்சிகளுமே ஓரணியில் திரள வேண்டும் என்று வேண்டுகொள் விடுக்கிறேன். கல்வி நிதி பிரச்னையால் மாணவர்கள் பாதிப்படைய மாட்டார்கள். தமிழக முதலமைச்சர் அண்மையில் தான் டெல்லி சென்றுள்ளார். அப்போதே அவரிடம் இதைப்பற்றி விளக்கியிருப்பார்கள். ஆண்டுதோறும் கொடுக்கப்படக் கூடிய தொகையை கொடுத்து விட்டோம். நகைக் கடன் கட்டுப்பாடுகள் மக்களின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு செல்வோம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஓரிடம்..? அதிமுக வழங்குமா.? நயினார் சொல்வது என்ன?