துருக்கியில் பதுங்கியிருந்த ‘டிரக் கிங்பின்’ இந்தியாவுக்கு நாடு கடத்தல்! அமித்ஷா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
2029 டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து போதைப்பொருள் கடத்தல் கும்பல்களையும் ஒழிக்க உறுதியாக இருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நவ்ப்ரீத் சிங் என்பவரை துருக்கியிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய மைல்கல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமித்ஷா வெளியிட்ட தகவலின்படி, நவ்ப்ரீத் சிங் ‘நவாப் விர்க்’ என்ற போலி அடையாளத்தை பயன்படுத்தி துருக்கி குடியுரிமையை பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஹெராயின் மற்றும் மெத்தாம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாக இந்திய விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
நவ்ப்ரீத் சிங்கின் உண்மையான அடையாளத்தை கண்டறிய இந்திய புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை மேற்கொண்டதாகவும், அவரது பின்னணி மற்றும் செயல்பாடுகள் குறித்து தகவல்களை திரட்டிய பின்னர் துருக்கி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமித் ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!! ஜலந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு!
துருக்கியிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட நவ்ப்ரீத் சிங், போதைப்பொருள் கடத்தல் மற்றும் அவர் மீது நிலுவையில் உள்ள பிற குற்ற வழக்குகள் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்து விசாரணை மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்குள்ளானவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக மத்திய அமைப்புகள் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதமும் துருக்கியிலிருந்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட முகமது சலீம் டோலாவை இந்தியாவுக்கு அழைத்து வந்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நவ்ப்ரீத் சிங்கின் நாடு கடத்தல் நடவடிக்கையும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, 2029 டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து போதைப்பொருள் கடத்தல் கும்பல்களையும் ஒழிக்க உறுதியாக இருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்த இலக்கை மத்திய அரசு எவ்வாறு செயல்படுத்தப் போகிறது என்பது அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தெரியவரும்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு தூக்கமே இல்லை! அமேதியில் தயாராகும் ஏகே-203... பயங்கரவாதிகள் குறித்து அமித் ஷா பரபரப்பு தகவல்!