×
 

சட்டமன்ற தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி 40% வாக்குகள் பெறும் - நயினார் நாகேந்திரன் நம்பிக்கை..!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக - பாஜக கூட்டணி 40 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று திமுக அரசை வீழ்த்தும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழக பாஜக மாநிலத் தலைவராகப் பதவியேற்ற பிறகு நயினார் நாகேந்திரன் கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறார். இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் திமுகவின் மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தயாராகிவிட்டனர். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, புதிய ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.

கூட்டணி குறித்துப் பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருகின்றன. என்.டி.ஏ. கூட்டணியைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியே தலைமை தாங்கி முடிவுகளை எடுப்பார் என ஏற்கனவே தெரிவித்திருந்ததை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார். அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டா போன்ற மேலிடத் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி, திமுகவுக்கு எதிரான ஒரு கூட்டணி உருவாக்கப்படும் என்றும், அது கோட்டையைப் பிடிப்பது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


குறிப்பாக, ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் பாமக போன்ற கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைந்து செயல்படும்போது திமுகவின் வெற்றி வாய்ப்பு முற்றிலுமாக முறியடிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். "2026 என்பது தமிழகத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்சி மாற்றத்திற்கான ஆண்டு. இதுவரை நடக்காத பல மாற்றங்கள் இந்தத் தேர்தலில் அரங்கேறும் என அவர் சூசகமாகத் தெரிவித்தார். நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சு பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தொண்டர்களிடையே ஒரு புதிய எழுச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கிவிட்ட நிலையில், அவரது இந்த அரசியல் கணிப்பு ஆளுங்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஒரே மேடையில் மோடி - இபிஎஸ்!  மதுராந்தகத்தில் என்.டி.ஏ கூட்டணி அறிவிப்பு? நயினார் நாகேந்திரன் அதிரடி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share