×
 

நீட் தேர்வில் தோல்வியா? மனம் உடையாதீர்கள்... உங்களுக்காக அண்ணன் விஜயின் அரசு உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்!

நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர்கள் உறுதுணையாக அருகிலேயே இருக்க வேண்டும். 104 என்ற எண்ணுக்கு அழைத்து பேசுங்கள். அவர்களுக்கு ஆறுதலாக இருங்கள் என அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தினார்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அமைச்சர் அருண்ராஜ், தேர்வில் எதிர்பார்த்த முடிவைப் பெறாத மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என்றும், அவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகள் இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், மாணவர்களின் மனநலத்திற்கு பெற்றோர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், நீட் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதே நேரத்தில், தோல்வியை சந்தித்த மாணவர்கள் அதை வாழ்க்கையின் முடிவாகக் கருதக் கூடாது என்றும், ஒரு தேர்வின் முடிவு மட்டுமே அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்காது என்றும் கூறினார்.

“நிறைய வாய்ப்புகள் இன்னும் இருக்கின்றன. மாணவர்கள் மனம் உடையாமல் அடுத்த இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும். உங்களுக்காக அண்ணன் விஜயின் அரசு இருக்கிறது. தோல்வியில் இருந்து மீண்டு வந்து மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்,” என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இன்று நீட் மறுதேர்வு! நாடு முழுவதும் 5,500க்கும் மேற்பட்ட மையங்கள் தயார்!

மாணவர்களின் மனநிலையில் இந்த நேரத்தில் பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். நீட் தேர்வில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காத மாணவர்களை தனிமையில் விடாமல், அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும் என்றும், அவர்களுக்கு மனஆதரவாக இருக்க வேண்டும் என்றும் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும், மன அழுத்தம், கவலை அல்லது விரக்தி போன்ற உணர்வுகள் இருந்தால், தமிழக அரசின் 104 சுகாதார உதவி எண்ணை தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார். மனநல ஆலோசகர்களின் உதவியைப் பெறுவதில் எந்த தயக்கமும் கொள்ள வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் காலகட்டத்தில் மாணவர்களின் மனநலம் குறித்து பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்து வருகின்றனர். கல்வியாளர்களும் மனநல நிபுணர்களும், தேர்வு முடிவுகளை விட மாணவர்களின் நலனே முக்கியம் என்றும், குடும்பத்தினர் தொடர்ந்து ஊக்கமும் ஆதரவும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், தோல்வியை சந்தித்த மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள இந்தச் செய்தி, சமூக வலைதளங்களிலும் பரவலாக கவனம் பெற்று வருகிறது.

இதையும் படிங்க: நாட்டின் பாதுகாப்புக்கு 'டெலிகிராம்' அச்சுறுத்தல்! சட்டவிரோத செயலுக்கு துணை போவதாக மத்திய அரசு அறிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share