×
 

ஓபிஎஸ்-ஐ கழட்டி விட்டு விஜயுடன் கூட்டணி!! பண்ருட்டி ராமச்சந்திரன் புது ரூட்!! உதயமாகுது புது கட்சி!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர்., - அ.தி.மு.க., என்ற புதிய கட்சியை துவக்கி, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்து தொடர்ந்து வரும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் மீண்டும் பெரும் உடைவு ஏற்படும் அறிகுறிகள் தென்படுகின்றன. பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் 'எம்.ஜி.ஆர். – அதிமுக' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க தீவிரமாக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய கட்சி தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) உடன் கூட்டணி அமைத்து 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பண்ருட்டி ராமச்சந்திரன் கடந்த சில மாதங்களாக பாஜகவுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தினகரனின் அமமுகவுடன் இணைந்து பன்னீர்செல்வம் அணி போட்டியிட்டது. 

ஆனால், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக – பாமக – அமமுக – ஐஜேகே உள்ளிட்ட கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், பன்னீர்செல்வம் அணிக்கு இடமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மதுராந்தகத்தில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் தினகரன் கலந்துகொண்டார், ஆனால் பன்னீர்செல்வத்துக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை. இது பன்னீர்செல்வம் அணியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாஜக - அதிமுக கூட்டணியில் இணைகிறதா தவெக! இரண்டாக பிரியுதா காங்கிரஸ்? செங்கோட்டையன் பதில்!!

பன்னீர்செல்வம் எந்த முடிவும் எடுக்காமல் தாமதித்து வருவதால், அவரது ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரன் கடும் எரிச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால், புதிய கட்சி தொடங்கும் எண்ணத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் முக்கிய நிர்வாகிகள் கூறுகையில், "பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் குறித்து அவரே சிந்திக்கவில்லை. 

ஆலோசனை வழங்கி வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அதிருப்தியில் உள்ளார். எனவே 'எம்.ஜி.ஆர். – அதிமுக' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார். இதில் பன்னீர்செல்வத்துடன் இருக்கும் அதிமுகவினர் அனைவரும் ராமச்சந்திரன் பக்கம் செல்ல முடிவு செய்துள்ளனர்" என்றனர்.

புதிய கட்சி தொடங்கினால், அது தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் என்று உறுதியாக கூறப்படுகிறது. விஜய் தலைமையிலான த.வெ.க. தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த புதிய அணி கூட்டணி தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் வட்டாரங்கள். 

பன்னீர்செல்வம் அணியில் இருந்து பெரும்பாலானோர் பிரிந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இது 2026 தேர்தலில் தமிழக அரசியல் களத்தை மேலும் சிக்கலாக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: எந்த கூட்டணிக்கு போகலாம்?! விஜய் வைத்த செக்! குழம்பி தவிக்கும் ஓபிஎஸ்! டிடிவி! பிரேமலதா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share