பட்டினம்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலம் ரெடி... புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!
தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த இடத்துக்கு அருகிலேயே முதலமைச்சர் விஜய்யின் இல்லம் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
சென்னை பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் விஜய் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி, ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று அரசு தரப்பில் ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகமும் சட்டப்பேரவையும் செயல்பட்டு வருகின்றன. ராணுவத்துக்குச் சொந்தமான இந்த வளாகத்தில் இடநெருக்கடி நீண்ட காலமாக இருந்து வருகிறது. மேலும், தலைமைச் செயலகத்தை விரிவுபடுத்த இந்திய தொல்லியல் துறை அனுமதி வழங்காததால், வேறு இடத்தில் புதிய வளாகம் அமைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இதையும் படிங்க: அன்று செங்கோட்டையன்.. இன்று ஆதவ் அர்ஜூனா! மீண்டும் இடம் மாறி அமர்ந்த விஜய்!! என்னவா இருக்கும்..??
இந்த நிலையில், புதிய தலைமைச் செயலகத்துக்கான இடமாக சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள அரசுக்குச் சொந்தமான ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான 25.16 ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கும், சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை திட்டத்துக்காக வழங்குவதற்கும் இரு தரப்பும் இசைவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, திட்டத்துக்கான நிர்வாக ஒப்புதலை தமிழக அரசு விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் சுமார் 15 தளங்களுடன், 20 லட்சம் சதுர அடி கட்டுமானப் பரப்பளவில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைய உள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி எனக் கூறப்படுகிறது.
புதிய தலைமைச் செயலகத்துக்கான இடத்தைத் தேர்வு செய்வதற்கு முன்பாக பட்டினப்பாக்கம், கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் நந்தம்பாக்கம் ஃபின்டெக் சிட்டி அருகிலுள்ள இடம் என மூன்று பகுதிகள் அரசால் பரிசீலிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் தேவையான அளவு நிலம் கிடைப்பதன் காரணமாக பட்டினப்பாக்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த இடத்துக்கு அருகிலேயே முதலமைச்சர் விஜய்யின் இல்லம் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது. மேலும், இந்த நிலம் அரசு குடியிருப்புகள் அமைப்பதற்காக கடந்த 1958-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இடநெருக்கடியில் செயல்பட்டு வரும் தற்போதைய தலைமைச் செயலகத்துக்கு மாற்றாக, பட்டினப்பாக்கத்தில் அமைய உள்ளதாகக் கூறப்படும் இந்த புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகத் திட்டம், தமிழக அரசின் முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமித் ஷாவுக்கு வீட்டு மசாலா பொடி.. மத்திய அரசை விமர்சிக்கக் கூடாதாம்! விஜய்யின் அதிரடி ஆர்டர்!!