வேளச்சேரியில் பறக்கும் விசில் சப்தம்! விஜய் குஷி!! மு.க.ஸ்டாலின், எடப்பாடிக்கு ஷாக்!
வேளச்சேரி தொகுதியில் திமுக, அதிமுகவை விட தவெக அதிக வாக்குகள் பெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் தான் விஜய் போட்டியிடவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுக கடுமையாக உழைத்து வருகிறது. ஆட்சியை பிடிக்க அதிமுக-பாஜக கூட்டணி முயற்சி செய்கிறது.
அதேநேரம், நாம் தமிழர் கட்சியும் தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) வேகமாக களத்தில் இறங்கியுள்ளன. இதனால் தமிழகத்தில் இதுவரை இல்லாத 4 முனை போட்டி உருவாகியுள்ளது. இது அரசியல் வட்டாரங்களை சூடுபிடிக்க வைத்துள்ளது.
நியூஸ் 7 தொலைக்காட்சி சில அமைப்புகளுடன் இணைந்து நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கான வாக்கு சதவீதங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தவெக பல தொகுதிகளில் திமுக, அதிமுகவை முந்தி செல்வது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: தமிழக சட்டசபைக்கு ஏப்.,10-க்குள் தேர்தல்!! பிப்.,-யில் வெளியாகுது அறிவிப்பு!! பத்திக்கிச்சு எலெக்ஷன் ஜுரம்!
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக 45.23%, அதிமுக 24.66%, தவெக 18.86%, நாம் தமிழர் 3.77% என்று கூறப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக 33.31%, அதிமுக 30.64%, தவெக 24.95% வாக்குகள் பெறும் என தெரிவிக்கப்பட்டது. அண்ணாநகர் தொகுதியில் திமுக 33.31%, அதிமுக 27.13%, தவெக 27.35% என்று உள்ளது.
விருகம்பாக்கம் தொகுதியில் தவெக 34.95% வாக்குகளுடன் முதலிடம் பிடிக்கும் என கணிப்பு தெரிவிக்கிறது. திமுக 28.27%, அதிமுக 28.44% என்று உள்ளது. தியாகராய நகர் தொகுதியில் தவெக 32.79%, திமுக 31.62%, அதிமுக 30.37% வாக்குகள் என்று கூறப்பட்டுள்ளது. இங்கும் தவெக முன்னிலை வகிக்கிறது.
மயிலாப்பூர் தொகுதியில் திமுக 32.84%, தவெக 32.14%, அதிமுக 21.99% என்று உள்ளது. வேளச்சேரி தொகுதியில் தவெக 30.06%, அதிமுக 27.87%, திமுக 27.79% வாக்குகள் பெறும் என கணிப்பு வெளியாகியுள்ளது. இந்த தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் தொகுதிகளிலும் திமுக முன்னிலை இருந்தாலும், தவெக வலுவான போட்டியாளராக உருவெடுத்துள்ளது.
இந்த 8 தொகுதிகளில் 5 இடங்களில் திமுகவும், 3 இடங்களில் தவெகவும் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது. அதிமுக ஒரு இடத்தில் கூட வெல்லாது என்றும், நாம் தமிழர் கட்சி எங்கும் 1 சதவீதத்தை தாண்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி பேச்சுகள், தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள் ஆகியவை தீவிரமாக நடைபெறுகின்றன. கருத்துக்கணிப்புகள் அடிக்கடி வெளியாவதால் அரசியல் கட்சிகள் உஷாராக உள்ளன.
சென்னையில் தவெகவின் முன்னிலை திமுக-அதிமுகவுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. விஜய் தலைமையிலான தவெக இளைஞர்கள், புதிய வாக்காளர்களிடம் செல்வாக்கு பெற்று வருகிறது. 2026 தேர்தல் தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கருணாநிதியும், ஜெயலலிதாவும் ரோல் மாடலா? அப்போ கொள்கை தலைவர்கள் எங்கே? சீமான் கிடுக்குப்பிடி!