×
 

நாட்டை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீங்க! GenZ இளைஞர்களுக்கு நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய அறிவுரை!

ஒரு படித்த இளைஞராகவும், பட்டதாரியாகவும் சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து கேள்வி எழுப்பி, அவை ஏன் நடைபெறுகின்றன என்பதையும் ஆராய வேண்டும் என அறிவுறுத்தினார்.

சென்னை: படிப்பு, வேலை, தொழில் என தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேறுவதுடன், நாட்டின் வளர்ச்சியிலும் இளைஞர்கள் பொறுப்புடன் பங்கேற்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். நாட்டை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும் அவர் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன், பட்டம் பெற்று வெளியே செல்லும் இளைஞர்களுக்கு கல்வியுடன் சமூக பொறுப்பும் இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

இன்றைய சூழலில் இளைஞர்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும் என்று அவர் கூறினார். ஒரு படித்த இளைஞராகவும், பட்டதாரியாகவும் சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து கேள்வி எழுப்பி, அவை ஏன் நடைபெறுகின்றன என்பதையும் ஆராய வேண்டும் என அறிவுறுத்தினார். அதில் தங்களுடைய பங்கு என்ன என்பதையும் சிந்திக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: உலகமே தடுமாறினாலும் இந்தியா அசராது! 7% வளர்ச்சி தொடரும் என நிர்மலா சீதாராமன் நம்பிக்கை!

மேலும், தங்களால் நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்பதை இளைஞர்கள் பொறுப்புடன் அறிந்து கொள்ள வேண்டும் என்றும், அந்த புரிதலுடன் தலைமைப் பண்பை வளர்த்துக் கொண்டு தங்களுடன் இருப்பவர்களையும் நல்ல முறையில் வழிநடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

“நீங்கள் படியுங்கள், பட்டம் பெறுங்கள். வேலைக்குச் செல்லுங்கள் அல்லது சொந்தமாக தொழில் தொடங்குங்கள். ஆனால் அதே நேரத்தில் நாட்டின் நிலை குறித்தும் சிந்திக்க வேண்டும்” என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.

உலகின் சில நாடுகளில் மக்கள் தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படுவதை சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன், நாட்டின் தலைமைப் பொறுப்பு எதிர்காலத்தில் இளைஞர்களின் கைகளில்தான் இருக்க வேண்டும் என்றார்.

நாடு முதன்மையானதாக இருக்க வேண்டும் என்றும், நாடு இருந்தால்தான் நமக்கான பாதுகாப்பும் வாழ்விடமும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, பட்டம் பெற்று வெளியேறும் இளைஞர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: GST வரியில் மீண்டும் மாற்றமா? நிர்மலா சீதாராமன் தலைமையில் ஓராண்டுக்கு பிறகு கூடும் கவுன்சில் கூட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share