பாஜகவின் புதிய தேசியத் தலைவராகிறார் நிதின் நபின்: போட்டியின்றித் தேர்வு! நாளை பதவியேற்பு
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசியத் தலைவராக நிதின் நபின் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை பதவியேற்கிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசியத் தலைவராக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபின் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியின் 45 ஆண்டுகால வரலாற்றில் மிக இளம் வயது தேசியத் தலைவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் உட்கட்சித் தேர்தல் நடைமுறைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்று கட்சியின் புதிய தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. தற்போதைய தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி முதல் செயல் தலைவராக பணியாற்றி வந்த நிதின் நபின், இன்று அதிகாரப்பூர்வமாகத் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் முன்னிலையில் இந்த வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. நிதின் நபினுக்கு ஆதரவாக 37 செட் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால், நிதின் நபின் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கட்சியின் தேசியத் தேர்தல் அதிகாரி கே. லக்ஷ்மண் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதையும் படிங்க: சத்துணவு ஊழியர்கள் ஸ்ட்ரைக்... மாணவர்களை பாதிக்கும்னு கூட உரைக்கலையா? அண்ணாமலை கொந்தளிப்பு..!
யார் இந்த நிதின் நபின்?
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதான நிதின் நபின், ஐந்து முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பீகார் மாநில பாஜகவின் மூத்த தலைவர் நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகன் ஆவார். பீகார் மாநில அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், பாஜக இளைஞர் அணியின் தேசியப் பொதுச் செயலாளர் மற்றும் பல்வேறு மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழகம், கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், இளைஞர் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்திருப்பது பாஜகவின் புதிய தேர்தல் வியூகமாகக் கருதப்படுகிறது.
நிதின் நபின் நாளை (ஜனவரி 20) காலை 11:30 மணியளவில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் முறைப்படி தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்று அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்க உள்ளனர். ஜே.பி. நட்டா தற்போது மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதால், கட்சியின் முழுநேரத் தலைவராக நிதின் நபின் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆட்டு மந்தையில் ஓநாய்..! பெண்கள் பாதுகாப்பை சூறையாடும் திமுக... நயினார் தாக்கு..!