“திமுகவை எதிர்த்தவன் எவனும் வாழ்ந்ததில்லை!” ராயபுரத்தில் ஆர்.எஸ். பாரதி ஆவேச பேச்சு!
திமுகவை எதிர்த்தவன் எவனும் இதுவரை வாழ்ந்ததும் கிடையாது, அரசியலில் நிலையாக நின்றதும் கிடையாது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் மாமன்ற உறுப்பினர் இளைய அருணா தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், 500 திமுக நிர்வாகிகளுக்குப் புத்தாடை மற்றும் பொங்கல் பொருட்களை வழங்கினார். இந்த விழாவில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஆர்.எஸ். பாரதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்தித்தது மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் விமர்சனங்களுக்குத் தனது பாணியில் மிகக் கடுமையான பதிலடிகளைக் கொடுத்தார்.
விழாவில் பேசிய ஆர்.எஸ். பாரதி, "அண்ணாவுக்கும் கலைஞருக்கும் ஏற்படாத பல சோதனைகளை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து வருகிறார்; ஆனால் அத்தனையையும் தகர்த்து அவர் சரித்திரம் படைத்து வருகிறார். இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பான 10 நகரங்களில் சென்னை மற்றும் கோவை இடம் பிடித்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். 'மாமா' மோடியின் அரசே சென்னை பாதுகாப்பான நகரம் எனப் பாராட்டும் போது, எடப்பாடி ஆளுநரிடம் மனு கொடுக்கிறார். உலக மகா திருடர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய திருடனிடம் மனு கொடுத்துள்ளனர்" என விமர்சித்தார்.
தொடர்ந்து பாமகவைச் சாடிய அவர், "பெற்ற அப்பனுக்குச் சோறு போடாத அன்புமணி ராமதாஸ், திமுக ஆட்சிக்கு வர முடியாது என்கிறார். ஆனால், ஸ்டாலினைப் போல எனக்கு ஒரு பிள்ளை பிறக்கவில்லையே என்று ராமதாஸே ஒருமுறை ஏங்கியுள்ளார். எவன் வந்து சூனியம் வைத்தாலும், மந்திரம் செய்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. அந்த மந்திரங்களை எல்லாம் முறியடிக்கும் ஆற்றல் திமுகவிற்கு உண்டு" என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.ஜி.ஆருக்குப் பிறகு சினிமா பார்ப்பதையே நிறுத்திவிட்டதால் 'ஜனநாயகன்' பட விவகாரம் குறித்துத் தன்னிடம் கேட்க வேண்டாம் எனத் தெரிவித்தார். மேலும், தேர்தல் நேரத்தில் லேப்டாப் கொடுப்பதாகக் கூறும் ஜெயக்குமார், அவர்கள் ஆட்சியில் இருந்தபோது ஏன் கொடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: "திடீர்னு ஏன் இவ்வளவு பாசம்? திமுக வலையில் விழுந்துடாதீங்க விஜய்!" தமிழிசை கொடுத்த அட்வைஸ்!
இதையும் படிங்க: திமுக ஊழல் கட்சி இல்லையென சவால் விட முடியுமா? முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி!