நான் கிங் மேக்கரா? போராடி ஜெயிப்பேன்! கரூர் முதல் ஜனநாயகன் வரை விஜய் Open Talk!
NDTV தலைமை ஆசிரியர் ராகுல் கன்வால் மற்றும் குழுவினர் தவெக தலைவர் விஜய்யுடன் 45 நிமிட உரையாடலை நடத்தியுள்ளனர். அதில் விஜய் 'ஜனநாயகன்' ரிலீஸ் தாமதம் குறித்து கவலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற NDTV தமிழ்நாடு சம்மிட் நிகழ்ச்சியின் போது, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய்யை NDTV தலைமை ஆசிரியர் ராகுல் கன்வால் தலைமையிலான குழு நேரில் சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் உரையாடியுள்ளது.
இது விஜய் அரசியலில் இறங்கிய பிறகு தேசிய ஊடகத்துடன் நடத்திய முதல் முக்கிய உரையாடலாகும். உரையாடலில் விஜய் தனது அரசியல் பயணம், சினிமா வாழ்க்கை துறப்பு, ஜனநாயகன் பட ரிலீஸ் தாமதம் மற்றும் கரூர் துயர சம்பவம் குறித்து திறந்த மனதுடன் பேசியுள்ளார்.
"நான் கிங்மேக்கர் அல்ல, நான் போராடி வெற்றி பெறுவேன்" என்று விஜய் தெளிவாக கூறினார். "ஏன் நான் கிங்மேக்கர் என்று நினைக்கிறீர்கள்?" என்று கேட்ட அவர், தனது ரோல் மாடல்களாக எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை குறிப்பிட்டார். சினிமா துறையை திட்டமிட்டு கைவிட்டதாகவும், அது எளிதான முடிவு அல்ல என்றும் தெரிவித்தார். தற்போது மக்களின் பிரச்சினைகளில் தனது கவனம் இருப்பதாக விஜய் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: விஜய் கட்சியில் இணைந்தது ஏன்? மோடிக்கு அடிபணிந்துவிட்டது அதிமுக? கு.ப.கிருஷ்ணன் கொந்தளிப்பு!
கொரோனா காலத்திற்குப் பிறகு அரசியலை தீவிரமாக யோசித்ததாகவும், இது திடீர் முடிவு அல்ல என்றும் கூறினார். தனது தந்தை அரசியல் இயக்குநராக இருந்ததால் அரசியல் உலகை அருகிலிருந்து பார்த்து வளர்ந்ததாகவும் பகிர்ந்தார். 33 ஆண்டு சினிமா பயணத்தை மனப்பூர்வமாக துறந்ததாகவும், நீண்ட அரசியல் பயணத்திற்காக தான் இங்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஜனநாயகன் பட ரிலீஸ் தாமதம் குறித்து பேசிய விஜய், அரசியல் நுழைவால் படம் பாதிக்கப்படுவதால் தயாரிப்பாளருக்கு வருத்தம் தெரிவித்தார். "என் அரசியலால் படங்கள் பாதிக்கப்படலாம் என்று முன்பே எதிர்பார்த்தேன். அதற்கு மனதளவில் தயாராக இருந்தேன்" என்று கூறினார்.
கரூர் துயர சம்பவம் தனக்கு பெரும் வேதனை அளிப்பதாகவும் விஜய் குறிப்பிட்டார். இந்த உரையாடலை அவர் ஒரு mock interview போல பார்ப்பதாகவும், போதுமான அளவு பேசவில்லை என்று சிலர் நினைக்கலாம் என்றும், ஆனால் தான் தொடர்ந்து உரைகள் மூலம் பேசி வருவதாகவும் தெரிவித்தார். சரியான நேரத்தில் ஊடகங்களுடன் மேலும் பேசுவேன் என்றும் கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், விஜய்யின் இந்த உரையாடல் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தவெகவின் எதிர்கால திட்டங்கள் மற்றும் விஜய்யின் உறுதியான அணுகுமுறை பற்றிய தெளிவான பார்வையை இது வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் கூடாரம் டோட்டலா காலி!! கு.ப.கிருஷ்ணனை தட்டித் தூக்கிய செங்கோட்டையன்! தவெகவில் ஐக்கியம்!