×
 

"NO TENSION"..! அதான் ஆன்லைன் இருக்கே... இணைய வழி பத்திரப்பதிவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய்..!!

இணையவழி பத்திரப்பதிவு திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய திட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 17 ஆம் தேதி, மாநில முதலமைச்சர் விஜய் பதிவுத்துறையில் இணையவழி ஆவணப்பதிவு திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இது முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பின் நூறாவது நாளாக அமைந்திருப்பதால், அவரது ஆட்சியின் முதல் நூறு நாள் சாதனைகளில் ஒன்றாகவும் இது பார்க்கப்படுகிறது.

நீண்ட காலமாக சொத்து வாங்கும் அல்லது விற்கும் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்து, பல முறை அலுவலகங்களுக்கு வந்துசெல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆவணங்களை எழுத, சரிபார்க்க, கையொப்பமிட, பதிவு செய்ய என பல கட்டங்களைக் கடக்க வேண்டியிருந்தது. இதனால் நேர விரயம், பயணச் செலவு, நடுத்தரர்களின் தலையீடு போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து எழுந்து வந்தன. இதை முற்றிலும் மாற்றும் வகையில், இணையவழி ஆவணப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது பொதுமக்கள் தங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ அல்லது எங்கு இருந்தாலும், இணையதளம் மூலம் ஆவணங்களைப் பதிவு செய்ய முடியும்.

இது 24 மணி நேரமும், ஆண்டு முழுவதும் கிடைக்கும் வசதியாக அமைந்துள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சில குறிப்பிட்ட ஆவணங்கள் மட்டுமே இணையவழியில் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன. அவை முதல் விற்பனை மனை ஆவணங்கள், முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு ஆவணங்கள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் விற்பனை ஆவணங்கள் மற்றும் வங்கிக் கடன்கள் தொடர்பான அடமானம் மற்றும் ரசீது ஆவணங்கள் ஆகியவை. கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், வங்கிகள், ஆவண எழுத்தாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் பதிவுத்துறை இணையதளத்தில் தங்களுக்கென தனி உள்நுழைவு கணக்கை உருவாக்கி, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.

இதையும் படிங்க: இனி எல்லாமே ஆன்லைன்..! NO TENSION..! இணைய வழி பத்திரப்பதிவு முறையை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்..!!

ஆவணப்பதிவு செய்ய விரும்புவோர் முதலில் பதிவுத்துறை இணையதளத்தில் பதிவு செய்து, ஆதார் அட்டையைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அடுத்து, ஆதார் அடிப்படையிலான விரல் ரேகை அல்லது கருவிழி அடையாளம் மூலம் உறுதிப்படுத்தல் செய்ய வேண்டும். இதற்கு யூஐடிஏஐ அங்கீகரித்த விரல் ரேகை ஸ்கேனர், கருவிழி ஸ்கேனர் மற்றும் வெப்கேமரா தேவைப்படும். ஆவணத்தில் கையொப்பமிடும் அனைவரும், உரிமையாளர்கள், வாங்குபவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகியோரின் ஆதார் விவரங்களும் சரிபார்க்கப்படும். ஆவணம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, சார்பதிவாளர் அதை ஆன்லைனில் பரிசீலித்து ஒப்புதல் அளித்தால், டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆவணம் பயனரின் கணக்கில் கிடைக்கும். அதோடு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாகவும் அனுப்பப்படும். பயனர்கள் தங்கள் கணக்கிலிருந்து அந்த ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், 30 நாட்களுக்குள் ஆன்லைனில் விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்படும்.இந்த முறை அமலுக்கு வந்ததால், சார்பதிவாளர் அலுவலகங்களில் வருகை எண்ணிக்கை சுமார் 30 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: ரூ.1 லட்சம் ரொக்க பரிசு! முதலமைச்சர் கோப்பை 2026 போட்டிகளுக்கு ஆன்லைன் பதிவு தொடக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share