தொடரும் வெடிகுண்டு மிரட்டல்.. எடப்பாடிக்கு Z+ பாதுகாப்பை வரவேற்கும் R.B.உதயகுமார்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கியதற்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக தற்போதுள்ள கூட்டணியை தக்கவைத்து தேர்தலை எதிர்கொள்ள காய் நகர்த்தி வருகிறது.
அதிமுக முதல் கட்டமாக பாஜகவோடு கூட்டணியை உறுதி செய்துள்ளது. அடுத்ததாக பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைக்க திட்டமிட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வழக்கம் போல தனித்து தான் போட்டி என அறிவித்துவிட்டார்.
இதனிடையே 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதற்கான பாடல் மற்றும் லோகாவை நேற்று வெளியிட்டார். தொடர்ந்து வரும் ஜூலை 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் இந்த சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் இபிஎஸ். இந்தச் சூழலில் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் வகையில், இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காங்கிரசை விட கூடுதலை தொகுதி வேணும்..! திமுகவிடம் அடம்பிடிக்கும் விசிக! தலைவலியில் ஸ்டாலின்!
முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவருக்கான பாதுகாப்பு Z+ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு மூன்று முறை வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசிற்கு கழக அம்மா பேரவையின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கோட்டைமேடு பகுதியில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் கூறியதாவது:
மக்களின் கோரிக்கையை ஏற்று இசட் பிளஸ் பாதுகாப்பு இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு சென்னையில் உள்ள வீட்டிற்கும், சேலத்தில் உள்ள வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. எடப்பாடி பழனிசாமி நாம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாகும். ஏற்கனவே ஒய் பிளஸ் பாதுகாப்பு இருந்தது. இதனை தொடர்ந்து இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கழக அம்மா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கோரிக்கை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து மத்திய அரசு கோரிக்கைகளை பரிசீலனை செய்து இன்றைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இசட் பிளஸ் பாதுகாப்பை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி உள்ளது. யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பது போல விரைவில் முதலமைச்சராக வரவுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு இன்றைக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எட்டு கோடி மக்களின் பாதுகாவலர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி வழங்கிய மத்திய அரசுக்கு கழக அம்மா பேரவையின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் இதன் மூலம் தமிழக மக்களின் உள்ளமும் குளிர்ந்து உள்ளது என கூறினார்.
இதையும் படிங்க: அதிமுக கிடையாது! பாஜக தான் மெயின் டார்கெட்! இது ஸ்டாலின் பார்முலா! சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!