காந்தி பெயரை வைத்து அரசியல் பண்ணுறாங்க! – எதிர்க்கட்சிகளுக்கு தமிழிசை பதிலடி
காந்தியின் பெயரை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக பாஜகவின் மையக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேர்தல் வியூகங்கள், பிரதமர் வருகை மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசினார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வலுவான தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளோம். பேச்சாளர் பயிற்சி முகாம்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் அணி வாரியான மாநாடுகள் மூலம் பாஜகவின் பதிவைத் தமிழகத்தில் ஆழமாகப் பதிய வைப்போம். வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டிப் பிரதமர் மோடி அவர்கள் தமிழகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது; இதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளோம், ஆனால் பயணத் திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பெயர் நீக்கப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், திமுக எத்தனை திட்டங்களுக்குக் காந்தி பெயரை வைத்திருக்கிறது? கலைஞர் பெயரை வைப்பதிலேயே அவர்கள் குறியாக உள்ளனர். காந்தியின் கொள்கைகளை திமுக-வும் காங்கிரஸும் மறந்துவிட்டன."
இதையும் படிங்க: 100 நாள் வேலை பெயர் மாற்றத்துக்கு மோடியின் வெறுப்பே காரணம் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
காந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் எந்தத் தொடர்பும் இல்லையென நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக மீண்டும் மீண்டும் அதே பொய்யைச் சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். காந்திக்கு பிரதமர் மோடி செலுத்தும் மரியாதையை விட வேறு யாராலும் செலுத்திவிட முடியாது. வளா்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்பு சட்டமான இத்திட்டத்தில் வேலை நாட்களும், ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளதை மறைத்துவிட்டு, பெயரில் அரசியல் செய்வதாகச் சாடினார்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரது கூட்டணி குறித்த கேள்விக்குப் பதிலளித்த தமிழிசை, "அதிமுக மற்றும் பாஜக தற்போது வலுவான கூட்டணியில் இருக்கிறோம். மற்ற கட்சிகள் இணைவது குறித்து எந்தத் தயக்கமும் இல்லை. ஓ.பி.எஸ் - டி.டி.வி. தினகரன் ஆகியோரது கூட்டணி மற்றும் அவர்கள் இணைவது போன்ற விவகாரங்களை டெல்லி தலைமை பார்த்துக் கொள்ளும். நாங்கள் மாநில அளவில் கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம்" எனத் தெளிவுபடுத்தினார்.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் தமிழக அரசின் போக்கைக் கண்டித்த அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசிற்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். சமணத் துறவிகள் இரவு நேரத்தில் கூட்டம் கூட்ட மாட்டார்கள் என்ற மரபு இருக்கும்போது, அங்கு கூட்டம் நடத்துவது முறையல்ல. முருகப் பெருமானுக்கு இரண்டு இடங்கள் இருக்கும்போது இரண்டு இடத்திலும் விளக்கு ஏற்ற வேண்டுமா எனச் சிலர் கொச்சைத்தனமாகப் பேசுகிறார்கள். இத்தகைய பேச்சுக்களுக்குத் தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அவலநிலையில் சேலம் அரசு மருத்துவமனை… என்னதான் செய்றீங்க? கொந்தளித்த அண்ணாமலை…!