சொன்னபடி தை பிறந்தாச்சு!! வழி பிறக்குமா? இன்று கூட்டணியை அறிவிக்கிறார் ஓ.பி.எஸ்? யாருடன் கை கோர்ப்பு?
சட்டசபை தேர்தலை யாருடன் கூட்டணி வைத்து களம் காண்பது என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு தொடர்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தனது அடுத்த கட்ட நகர்வு குறித்து இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்து தனி அணியாகச் செயல்படும் ஓபிஎஸ்ஸின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம், கடந்த சில மாதங்களாக மௌனம் காத்து வந்தது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீரென தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இணைந்தது போன்ற ட்விஸ்ட், ஓபிஎஸ்ஸின் அணியில் சலசலப்பை உருவாக்கியது.
எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து விமர்சித்து வந்த டிடிவி, இப்போது பாஜகவுடன் கைகோர்த்துள்ளார். இதனால், ஓபிஎஸ்ஸின் அணியில் இருந்த பல ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக விலகி, திமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இணைந்து விட்டனர். தற்போது ஓபிஎஸ்ஸுடன் இருக்கும் பிரபல முகங்கள் என்றால், வெல்லமண்டி நடராஜன் மற்றும் ஐயப்பன் எம்எல்ஏ மட்டுமே.
இதையும் படிங்க: இதமட்டும் பிரதமர் மோடிகிட்ட கேட்டு சொல்லுங்க!! எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் வச்ச ரெக்விஸ்ட்!
இந்த மௌனத்தை கலைக்கும் வகையில், நேற்று பெரியகுளத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்து போடி அலுவலகத்துக்கு புறப்பட்டபோது, செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் பேசினார். கூட்டணி குறித்த கேள்விக்கு, "இன்று நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு முடிவை அறிவிப்பேன்" என்று அவசரமாகக் கூறிவிட்டுச் சென்றார்.
இன்று தேனி மாவட்டத்தில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகச் செயலாளர் எஸ்பிஎம் சையதுகான் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட திட்டங்கள் மற்றும் கூட்டணி விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கவுள்ளார். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அவர் தனது முடிவை வெளியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஓபிஎஸ் என்டிஏ கூட்டணியில் இணைவார் என்று அவரது வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. டிடிவி தினகரனும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். வாக்கு சதவீதம் தான் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் என்பதால், பாஜக ஓபிஎஸ்ஸை தங்கள் அணிக்குள் கொண்டு வர தீவிரமாக முயற்சிக்கிறது.
அதேநேரம், சமீபத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரின்போது அமைச்சர் சேகர்பாபு ஓபிஎஸ்ஸுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தன்னுடன் இருக்கும் வெல்லமண்டி நடராஜன் மற்றும் ஐயப்பனுக்கு எம்எல்ஏ சீட், தனது மகன் ஓபி ரவீந்திரநாத்துக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தால் திமுகவில் இணைவேன் என்று ஓபிஎஸ் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு இந்த பேச்சு தீவிரமடைந்தது.
ஆனால் இன்றைய கூட்டம் எந்த திசையில் செல்லும் என்பது பெரும் சஸ்பென்ஸ். தையும் பிறந்து விட்டது, இனி ஓபிஎஸ்ஸுக்கு புதிய வழி திறக்குமா? அல்லது அரசியல் ட்விஸ்ட் வருமா? அனைவரும் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு கிடையாது!! ஆனா மெகா ஆஃபர் இருக்கு!! காங்கிரஸை தக்க வைக்க திமுக போட்ட தூண்டில்!!